தை அம்மாவாசை

மனிதப் பிறவி மகத்துவம் மிக்கது. மனிதன் வாழ்ந்த காலத்தில் செய்த பாவ புண்ணியங்கள், அவனது அடுத்த பிறவியிலும் தொடரும் என்கிறது இந்துமதம்.

ஓடியிட்ட பிச்சையும், உவந்து செய்த தானமும், சாடியிட்ட குதிரை போல் தர்மமும் துணையாய் நிற்கும் என்கிறது ஒரு சித்தர் பாடல். மனிதன் இறந்ததும் அவன் கூடவே செல்வது, அவன் செய்த தானமும் தர்மமும்தான் என்பது இதன் பொருள்.

பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். நம்மை பெற்ற தாய், தந்தை, தாத்தா, பாட்டிகள் தான் பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

அவர்கள் மரணம் அடைந்த பிறகு பித்ரு லோகம் சென்றுவிடுகின்றனர். மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்தபோது அவர்களை சரிவர கவனிக்காததால், அவர்கள் படும் துன்பம் பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேருவதாக ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளன. இது பித்ரு தோஷம் எனப்படுகிறது.

பித்ருக்கள் ஆன்மா சாந்தியடைய அவர்களுக்கு மறக்காமல் காரியம் நிறைவேற்ற வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்கள். உதவிகள் பல செய்து கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள்.

‘ஒருவன் தனது தாய், தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல், எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்று சிவனும், விஷ்ணுவும் கூறியுள்ளனர்.

முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று மேன்மேலும் சிறந்து விளங்கும். முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய தினங்களில் திதி, தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்கின்றனர்.

பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். கெடுதல், துன்பத்தை தங்கள் புனிதச் செயலால் தடுத்து நிறுத்துகின்றனர்.

சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக இருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவற்றை போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் மூதாதையர்களின் பசியும், தாகமும் விலகி நமக்கு ஆசி வழங்குவார்கள். அமாவாசையன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பித்ருக்கள் நின்று கொண்டு தங்களுக்கு வழங்கப்படும் எள் தண்ணீரை பெற்று கொள்வதற்காக காத்து இருப்பார்களாம்.

பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தை அமாவாசை சிறந்த நாளாகும். அன்று கடல், ஆறு, புண்ணிய நதிகள் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று இறந்த தாய், தந்தையர்களை நினைத்து திதி கொடுக்கலாம். தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, வடமாநிலங்களில் காசி, திரிவேணிசங்கமம் ஆகிய இடங்களில் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்று சூரிய வழிபாடு செய்வதும் அவசியம். இறந்தவர் களின் நாள், தேதி தெரியாதவர்களும், 12 அமாவாசையன்றும் திதி கொடுக்க முடியாதவர்களும் தை, ஆடி மகாளய அமாவாசை திதிகளில் திதி கொடுக்கலாம். அவ்வாறு செய்வது ஆண்டுதோறும் திதி கொடுத்த பலனைக் கொடுக்கும்.

பித்ருக்கள் என அழைக்கப்படும் மூதாதையர் களின் திசை தெற்கு. சூரியன் புரட்டாசி மாதம் கன்னி ராசிக்குள் பிரவேசிப்பார். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது. அம்மாதத்தில் அவர், பித்ரு லோகம் செல்வார். பித்ருக்கள் அனைவரும் அவருக்கு பாத பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த பூஜைக்கு ‘திலஸ்மார நிர்ல்ய தரிசன பூஜை’ என்று பெயர். இந்தப் பூஜையின் போது மகாவிஷ்ணு உடல் முழுவதும், எள் தானியம் நிறைந்த நிலையில் காட்சியளிப்பார். பித்ருக்களின் ஆராதனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மகாவிஷ்ணு பித்ருக்களுக்கு அதற்கான பலன்களை வழங்குவார். அதே பலன்களை பித்ருக்களின் மூலம் பூமியில் வாழும் உறவுகளுக்கும் வழங்கி அருள்புரிவார்.

பின்னர் பித்ருக்களை 15 நாட்கள் பூலோகத்துக்கு சென்று, உங்கள் குடும்பத்தினருக்கு பலன்கள் கொடுத்து வாருங்கள் என்று கூறி அனுப்பி வைப்பார். அவர்களும் மகிழ்ச்சியோடு பூலோகம் புறப்படுவார்கள். மகாளய அமாவ£சைஅன்று மொத்தமாக கூடுகின்றனர். அந்த நேரத்தில் நாம் அவர்களை வணங்கி முனோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்வது அவசியம். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம், தை அமாவாசையன்று விடை          கொடுத்து அனுப்புகிறோம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் பித்ருக்களின் பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், துணி தானம்  செய்யலாம்.

காகம் வடிவில் மூதாதையர்கள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அதனால் காகத்துக்கு உணவு அளிப்பதும் முக்கியம். அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். காலை 6.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது நல்லது. ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது. மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது.

பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுக்களுக்கு வழங்கலாம். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைக்க வேண்டும். அதன்பிறகே தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் ஒருசில பித்ருக்கள் கோபத்துடன் சாபம் தந்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிப்பட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தப்படி தான் கொடுக்க வேண்டும். தன் முன்னோர்கள் மோட்சம் செல்லாமல் தவிப்பதைப் பார்த்த பகீரதன், கடும் சிரமப்பட்டு கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான். அதன் மூலம் அவர் களுக்கு மோட்சம் அளித்ததாக புராணம் கூறுகிறது.

 அமாவாசையின்  மகிமை

‘இன்று நிறைந்த அமாவாசை’ என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி தான் முக்கியமானது. மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம், தோஷம் அடையும். ஆனால் அமாவாசைஅன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு– கேது மற்றும் கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும்

காகத்துக்கு சாதம் படைப்பது ஏன்?

அமாவாசை வழிப்பாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே உணவருந்தும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், அது எமனின் தூதுவன் எனவும் கூறப்படுகிறது. காகத்துக்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. காகம் சாதத்தினை எடுக்காவிட்டால் முன்னோர்களுக்கு ஏதோ மனக்குறை இருப்பதாக கருதுவது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

தந்தைக்கு தர்ப்பணம் செய்த ராமர்

ராமர் வனவாசத்தில் இருந்தபோது அவரது தந்தை தசரதன் இறந்து விட்டார். வனவாச காலமான 14 வருடங்கள் ராமர் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்யமுடியவில்லை. வனவாசம் முடிந்து அயோத்தி மன்னரான பிறகும் அவர் நீத்தார் கடன்செய்ய முடியவில்லை. எத்தனையோ தலங்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுத்தாலும், தர்ப்பணத்துக்கு பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்கள் தர்ப்பணம் முடிவதற்குள் புழுக்களாக மாறின. இதனால் மன வருத்தப்பட்ட ராமன், சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஈசனின் அருளாசிபடி ராமர், திலதர்ப்பணபுரி சென்று தர்ப்பணம் செய்தார். அப்போது தர்ப்பணத்துக்கு பிடித்து வைக்கப்பட்ட பிண்டங்கள் மல்லிகை பூக்களாக மாறி மணம் வீசின. இதனை ஏற்றுக்கொண்ட தசரதன், ராமருக்கு ஆசி கூறினார். பின்னர் பிண்டங்கள் லிங்கங்களாக மாறின. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பூந்தோட்டம் சரஸ்வதி கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் திலதர்ப்பணபுரி ஆலயம் அமைந்துள்ளது.

துயர் போக்கும்  துளசி மாலை

பித்ருக்களுக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் மகாவிஷ்ணு. அவரை துளசி மாலை சாத்தி வழிப்படுவது விசேஷம். அமாவாசையன்று முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையையோ சமர்ப்பிக்க வேண்டும். இது பெருமாளை சந்தோஷப்படுத்தும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்

திங்கள் கிழமை – அமாவாசை

திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் தனித்துள்ள அரசமரத்தை சிவ பஞ்சாட்சரம் ( நமசிவய ) சொல்லியபடி 108 முறைகள் வலம் வரவேண்டும்
என்பது குருசிஷ்ய அனுபவ சாஸ்திரம் சொல்லும் ரகசிய வழிபாட்டு முறை.

ஏன் ?
என்ன காரணம் ?

ஒரு நாட்டின் மன்னனுக்கு திடீர் என்று ஒரு இனம் காண முடியாத நோய் தாக்கியது.

எல்லா வைத்தியர்களும் வந்து பார்த்தார்கள்., முடிவில் அரண்மனை வைத்தியர் வந்தார்.

ஆனால் நோய் என்ன என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.

நோயை அறியாமல் மருந்து கொடுக்க முடியவில்லை.
மன்னர் நாளுக்கு நாள் உடல் தளர்ந்து மெலிந்து உருக்குலைந்து போனார்.

அப்போது மந்திரி.,
மன்னா., ராஜகுருவை அழையுங்களேன் அவரிடம் கேட்போம் என்றார்.

மன்னரும் சரி என்று ராஜ குருவை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார்.

ராஜகுரு வந்தார். மன்னனைப் பார்த்தார்.

சில நொடிகள் கண்களை மூடி த்யானித்தார்.
மந்திரியை அழைத்தார்.

அவரிடம் ராஜகுரு.,
மந்திரி., இவ்வூரில் உள்ள சலவை தொழிலாளியின் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார்.

உடனே மந்திரி பணியாட்களை விட்டு அழைத்து வரச் செய்தார்.
மிகவும் பயந்து போய் வந்தாள் அந்த பெண்மணி.

அய்யா., நாங்கள் ஏதும் தவறு செய்ய வில்லையே என்றாள் அவள்.
அம்மா பயப்படாதே., உள்ளே வா என்றழைத்தார் ராஜகுரு.

தைரியம் சொல்லி அவளை அழைத்துக்கொண்டு ராஜா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்ற ராஜகுரு., மகாராஜாவைக் காண்பித்து., அம்மா நீங்கள் ராஜாவைப்பார்த்து மகாராஜா கவலைப்படாதீர்கள் நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று சொல்லுங்கள் என்று கூறினார்.

பயந்து கொண்டே ராஜகுரு சொன்ன அந்த வார்த்தைகளை அப்படியே கூறினாள் அந்த பெண்மணி.

சரியம்மா நீ போகலாம் என்று சொல்லி அந்த பெண்ணை நிறைய சன்மானங்களோடு அனுப்பி வைத்தார் ராஜகுரு.

அடுத்து வந்த சில நாட்களிலேயே மகாராஜா நலமாகி உடல் தேறினார். பழைய நிலையை அடைந்தார்.

எப்படி இது..?

பலவிதமான மருந்துகளால் தீராத எனது நோய் எப்படி குணமானது சொல்லுங்கள் என ராஜகுருவை வேண்டி கேட்டுக் கொண்டார் மகாராஜா.

மகாராஜா.,
திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வருபவர்களின் வாக்குவன்மை மிகவும் அதிகமாக மேம்படும்., ஆன்ம பலமும் பெருகும். இது அவர்களுக்கு இயற்கைதரும் மிக உயர்ந்த சன்மானம்.

ஆனால் நான் ஞானதிருஷ்டியில் பார்த்ததில் உங்கள் நாட்டில் இந்த பெண்மணி ஒருத்திதான் அவ்வாறு செய்திருந்தாள்.
ஆனால் அதன் பலனை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலம் வந்திருந்தாள்.
அதனால்தான் அவளை வைத்தே உங்களுக்கு வைத்தியம் செய்தேன்.

மன்னா.,
முதன் முதலில் நாம் ஒரு சலவைத்தொழிலாளியை வைத்து இதை செய்ததால் பின் வரும் காலங்களில் யாரேனும் இதனை கடை பிடிப்பார்களேயானால்., அதாவது

அவர்கள் திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வந்தபின் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவேண்டும்.

அவ்வாறு வாங்கிக்கொண்டால் அவர்களின் வாக்குவன்மையும் ஆன்ம பலமும் அதிகரிக்கும்.,
அதனால் பல உயிர்கள் காக்கப்படலாம்.

நாம் வளர்க்கும் உயிர் ஆபத்தில் இருக்கும் ஆடுகள் மாடுகள் முன்பாக நின்று “பயம் வேண்டாம் நீ பிழைத்துக்கொள்வாய்” என்று சொல்லி அந்த உயிரையும் காக்கலாம்.

ஆனால் இதனை பொதுநலத்திற்காக மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
என்று சொல்லி முடித்தார்.

இந்த வழிபாடு சித்தர்களால் சொல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *