சனி மஹாப்பிரதோஷம்

வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என மாதத்திற்கு இருமுறை பிரதோஷ காலம் வருகிறது. பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி தினத்தன்று சூரியன் மறையும் மாலைப் பொழுதில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள ஏழரை நாழிகை காலம் தான் பிரதோஷ காலமாகும்.
மாதம் இருமுறை திரியோதசி நாளில் பிரதோஷம் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. முன் ஒரு காலத்தில் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அசுர குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. இந்த போரில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. இப்படியே போனால், போர் முடிவுறும்போது தேவலோகத்தில் தேவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் இதனை நினைத்து கலக்கம் கொண்டனர். பின்னர் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டி தேவர்கள் அனைவரும் இந்திரதேவன் தலைமையில் பிரம்மதேவரை சந்தித்து, தங்கள் கலக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையடுத்து பிரம்மதேவரும், தேவர் களுடன் சேர்ந்து இறவா நிலையில் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்தார். நெடிய சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் தான், தங்களின் கலக்கத்திற்கு தகுந்த விடை கிடைக்கும் என்று பிரம்மதேவர் ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள விஷ்ணு பகவானை சந்தித்து தங்களின் கலக்கத்தை தெரிவித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். தன்னிடம் முறையிட்டு நின்ற தேவர்களை நோக்கிய விஷ்ணு, `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்’ என்று உபாயம் கூறினார்.
இந்த வார்த்தையை கேட்டதும் தேவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, கவலையே மேம்பட்டது. பாற்கடலை கடைவதா? அது எப்படி முடியும் என்று கவலை கொள்ளத் தொடங்கினர். அதற்கான வழியையும் தாங்களே கூறும்படி மகாவிஷ்ணுவை பணிந்தனர்.
`மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாம்பின் தலைப் பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்’ என்று வழியையும் தெரிவித்தார் மகாவிஷ்ணு. பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும்.
அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்களின் கலக்கம் நீடித்தது. தேவர்களின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட மகாவிஷ்ணு, `கவலை வேண்டாம். உரிய நேரத்தில் உதவுவோம்’ என்று கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கிற்று.
இந்த பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது.
இதற்கிடையில் தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது.
இவ்வாறு பாம்பினால் கக்கப்பட்ட `காளம்’ என்ற நீல விஷமும், கடலில் இருந்து பொங்கிய `ஆலம்’ என்ற கருப்பு விஷமும் சேர்ந்து கடுமையான வெப்பத்தையும், கடும் புயலையும் ஏற்படுத்தியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். பின்னர் தேவர்கள் அனைவரும் கயிலைக்கு விரைந்தனர்.
அங்கு கயிலை வாயிலில் காவலுக்கு நின்ற நந்தி தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆபத்து காலங்களில் எல்லாம் உலகை காத்து அருள்புரியும் சிவபெருமானிடம், அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமான அணுக்கத் தொண்டர் சுந்தரரை அழைத்து, `அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!’ என்று உத்தரவிட்டார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார். உலகையே அச்சுறுத்திய கொடிய விஷத்தை ஒரு துளியாக மாற்றி, சுந்தரர் கொண்டு வந்ததை பார்த்து தேவர்கள் அனைவரும் அதிசயித்து நின்றனர். அந்த விஷத்தை வாங்கிய ஈசன், அதனை அருந்தினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் கொண்டாள்.
`கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே’ என்று கருதிய பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.
விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் கார்த்திகை மாதம் ஏகாதசி தினமாகும். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது.
மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலமாக அவர்கள் இறவா நிலையை அடைந்தனர். ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியின் காரணமாக, அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து கடும் விஷத்தை உட்கொண்ட சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.
தேவர் களின் இந்த தவறை அவர்கள் உணரும்படி பிரம்மதேவர் எடுத்துரைத்தார். குற்ற உணர்ச்சியால் வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலையை அடைந்து, கயிலைநாதனை தரிசித்து தங்களை மன்னித்து அருள வேண்டினர்.
இதனால் உளம் கனிந்து மகிழ்ச்சி அடைந்த ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அவர் புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்’ என்று பெயர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், மேலும் எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.
ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஆகும். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக
கருதப்படுகிறது.

2 thoughts on “சனி மஹாப்பிரதோஷம்”

  1. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மிக்க நன்றீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *