அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி!

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.

எனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்று சொல்வார்கள். அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.

இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.

இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஆடி பௌர்ணமி

ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி ரொம்பவே விசேஷம். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோயிலுக்குச் சென்று, வழிபடுவதும் விசேஷம்.

குறிப்பாக, பௌர்ணமியில்தான் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வேண்டிச் செல்வார்கள். ஆடி மாதம் பௌர்ணமியான  அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஆடி மாதம் பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும் ஞானமும் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்!

ஆடி பௌர்ணமியும் சிறப்பு

அம்மனை விளக்கேற்றி வழிபடுவதும் மிகுந்த பலனைத் தரும். எனவே நாளைய தினம் பெண்கள், அம்மன் கோயில்களில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்!

பொதுவாகவே பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது விசேஷம். குறிப்பாக, ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிகள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோல் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்து அளிப்பார்கள்.

ஆடி – செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.