ஆணவம்

மயிலுக்கு இருப்பதைப் போன்ற அழகு மிகுந்த தோகை, வேறு எந்த பறவைக்கும் கிடையாது. யானையின் தந்தங்களைப் போல, வேறு எந்த விலங்குக்கும் அழகு மிகுந்த தந்தங்கள் இல்லை. ஹார்ஸ் பவர் என்று சொல்லப்படும் குதிரையின் ஓட்டத்திற்கு இணை உண்டா? இருந்தும், அவை எல்லாம் கர்வப்படுவதில்லை. ஆனால், அவற்றை எல்லாம் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் மனிதனுக்கோ ஆணவம் கண்ணை மறைக்கிறது. பைரவரைச் சுற்றி, நான்கு நாய்கள் இருப்பதை படத்தில் பார்த்திருப்போம்.

பைரவரின் திருமேனி, அபூர்வமான அமைப்பு கொண்டது. அவரின் திருவடி முதல் இடுப்பு வரை, பிரம்மதேவரின் வடிவம்; இடுப்பு முதல் கழுத்து வரை, மகாவிஷ்ணுவின் வடிவம்; கழுத்து முதல் திருமுடி வரை, ருத்ர வடிவம். இவ்வாறு, மும்மூர்த்திகளின் வடிவாகத் திகழ்பவர், பைரவர். ஒருநாள், சிவபெருமானை தரிசிக்க, கைலாயம் வந்தார் பைரவர். வெளியில், தன் வாகனமான சுவானத்தை (நாயை), நிறுத்தி விட்டு, கைலாயத்திற்குள் பிரவேசித்து, சிவபெருமானை தரிசித்து திரும்பும் போது, சுவானத்தை காணவில்லை. பல இடங்கள் தேடியும் தென்படவில்லை.

வருத்தத்தோடு மறுபடியும் கைலாயநாதரை தரிசித்து, முக்கண் முதல்வரே… தங்கள் ஆணைப்படி, உலகெங்கும் வலம் வந்தேன்; தீயவர்களை தண்டித்தேன். இன்று, தங்களை தரிசித்து திரும்பிய போது, அடியேனின் வாகனத்தை காணவில்லை; எங்கு தேடியும் பலன் இல்லை. ஏன் இப்படி என்பது புரியவில்லை… என முறையிட்டார்.
பைரவா… உன் வாகனமான சுவானம், சாதாரண சுவானங்களில் ஒன்றல்ல; வேதமே அவ்வடிவில் உனக்கு வாகனமானது. இது உனக்குத் தெரிந்திருந்தும், ஆணவத்தில், அதை சாதாரண சுவானமாக நினைத்து விட்டாய்… அகங்கார வசப்பட்டோருக்கு வேதத்தின் பொருள் விளங்காது. அதன் காரணமாகவே, உன் வாகனம் மறைந்தது… என்றார். அதைக் கேட்டதும், பைரவர் நடுங்கி, பரம் பொருளே… அடியேன் அகங்கார வசப்பட்டதற்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது; மன்னித்து, அருள் புரியுங்கள்… என வேண்டினார். பைரவா… மதுரைக்கு வடமேற்கில், வாதவூர் எனும் தலத்திற்கு செல். அங்கு உன் துயரம் தீரும்… என்று அருள் பாலித்தார் சிவபெருமான்.

வாதவூர் என அழைக்கப் பட்ட திருவாதவூருக்கு புறப்பட்டார் பைரவர். இவ்வூருக்கு வேதபுரி என்ற பெயரும் உண்டு. இங்கு, தன் பெயரால் குளம் உண்டாக்கி, நீராடியவர், திருநீறு அணிந்து, ருத்ராட்ச மாலை சூடி, ஆலயத்திற்குள் புகுந்து, சிவனை பூஜித்தார்.
பெருமானே… பொல்லாத ஆணவத்தால், நான் பட்ட துன்பம் போதும். வேத மயமான வாகனத்தை இழந்த அடியேனின் துயரத்தை தீருங்கள்… என மனமுருகி வேண்டினார். அப்போது, மூல லிங்கத்தில் இருந்து நான்கு சுவானங்களுடன் வெளிப்பட்ட சிவபெருமான், பைரவா… வேத மயமான இந்நான்கு சுவானங்களையும் பெற்றுக் கொள்; இவை அனைத்து விதமான பேறுகளையும் தரும். உன்னால் உருவாக்கப்பட்ட பைரவ தீர்த்தத்தில் நீராடியவர்கள், எல்லா மங்கலங்களையும் அடைவர்…
என்று அருளி, மறைந்தார். அகங்காரம் நீங்கி, சிவபெருமானால் அருளப்பட்ட நான்கு சுவானங்களுடன் அங்கிருந்து புறப்பட்டார் பைரவர். மனிதன், ஒவ்வொரு படியாக முன்னேற முன்னேற, அவனை அறியாமலே, ஆணவம் தலையெடுக்கும். சிறிதளவு ஏமாந்தால் கூடப் போதும். நம் முன்னேற்றத்திற்கு காரணமானவை, நம்மிடம் இருந்து மறைந்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *