கால பைரவாஷ்டமி

சிவாலங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதியாக வழிபாடு செய்யக்கூடிய தெய்வம் பைரவர். ஆலயத்தின் காவல் தெய்வமாக இருக்கும் பைரவர் சிவனுடைய அம்சமாக கருதப்படுகிறார்.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்ததாகும். அந்த நாள் தான் பைரவாஷ்டமி என்று சொல்லப்படுகிறது. அதிலும், தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று கருதப்படுகிறது.

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, “காளி’ என பெயர் சூட்டினாள்.

காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, “பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, “காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, “காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, “வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.

சித்திரை: ஸ்நாதனாஷ்டமி,
வைகாசி: சதாசிவாஷ்டமி,
ஆனி: பகவதாஷ்டமி,
ஆடி: நீலகண்டாஷ்டமி,
ஆவணி: ஸ்தாணு அஷ்டமி,
புரட்டாசி: சம்புகாஷ்டமி,
ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி.
கார்த்திகை: கால பைரவாஷ்டமி,
மார்கழி: சங்கராஷ்டமி,
தை: தேவதாஷ்டமி,
மாசி: மகேஸ்வராஷ்டமி,
பங்குனி: திரியம்பகாஷ்டமி.
இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;
அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்

அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்; அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதாப யார் சொன்னது.

இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

1. வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்
ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள்.
 
கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம் :-

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.
அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.
 
“பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்”
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
 
ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் .அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
 
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
 
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.
சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
 
ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
 
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
 
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா?
 
ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது.
சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம்.
குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
 
சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது.
 
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது .
புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.,
அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும்.
 
அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது.
பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான்.
 
இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.
பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.
 
ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.
சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.
இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிசேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான சிவ கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.
 
 
 

பிரதோஷம்

சர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு :-

இறைவழிபாடு குறைகளை களைந்து நிறைவினை தரும். முக்கியமாக, புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால், ஒன்றுக்கு கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும். இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று, இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது?

நீண்ட காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர்.

அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.

பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.
தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ‘காளம்’ என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த ‘ஆலம்’ என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.
தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, இடமும் வலமும் ஆக ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.

நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய ‘சுந்தரர்’ என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி “அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!” என்று பணிந்தார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.
எல்லோரும் அதிசயயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் ‘விஷாபகரணமூர்த்தி’ என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். ‘கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் ‘நீலகண்டர’ ஆனார். விஷம் கொண்டுவந்த ‘சுந்தரர்’ ‘ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார்.

கயிலையில் ஈசன் விஷம் உண்டபிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து ‘சந்தியா நிருத்தம்’ எனும் நடனம் ஆடினார்.
இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் ‘ஹரஹர’ என்று துதித்தனர்.

அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.

பிரதோஷ காலங்களும், விரத மகிமைகளும் :-

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன 1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம். தினமும் வரும் மாலை வேலைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும். ” சிவாய நம ” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிய நேரம் ” கார்த்திகை மாத சனிக் கிழமை ” தினம். பிரதோஷ தினம், மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று சேர்ந்து உபவாசம் இருந்த திருநாளாகும். கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் மிகச் சிறப்பு.

நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.

சனி மஹாப்பிரதோஷம்

வளர்பிறையில் ஒரு பிரதோஷம், தேய்பிறையில் ஒரு பிரதோஷம் என மாதத்திற்கு இருமுறை பிரதோஷ காலம் வருகிறது. பிரதோஷ காலம் என்பது சரியாக ஏழரை நாழிகை மட்டும்தான். திரியோதசி தினத்தன்று சூரியன் மறையும் மாலைப் பொழுதில், சூரியன் மறைவதற்கு மூன்றே முக்கால் நாழிகையும், மறைந்த பின்பு உள்ள மூன்றே முக்கால் நாழிகையுமாக உள்ள ஏழரை நாழிகை காலம் தான் பிரதோஷ காலமாகும்.
மாதம் இருமுறை திரியோதசி நாளில் பிரதோஷம் வந்த போதிலும் சனிக்கிழமை நாளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறந்தது. முன் ஒரு காலத்தில் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், அசுர குலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான போர் மூண்டது. இந்த போரில் இரு தரப்பினரும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர்.
இதன் காரணமாக இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க நேரிட்டது. இப்படியே போனால், போர் முடிவுறும்போது தேவலோகத்தில் தேவர்கள் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள் இதனை நினைத்து கலக்கம் கொண்டனர். பின்னர் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டி தேவர்கள் அனைவரும் இந்திரதேவன் தலைமையில் பிரம்மதேவரை சந்தித்து, தங்கள் கலக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.
இதையடுத்து பிரம்மதேவரும், தேவர் களுடன் சேர்ந்து இறவா நிலையில் இருக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ந்தார். நெடிய சிந்தனைக்கு பின் மகா விஷ்ணுவிடம் தான், தங்களின் கலக்கத்திற்கு தகுந்த விடை கிடைக்கும் என்று பிரம்மதேவர் ஆலோசனை வழங்கினார்.
இதையடுத்து தேவர்கள் அனைவரும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள விஷ்ணு பகவானை சந்தித்து தங்களின் கலக்கத்தை தெரிவித்து, இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். தன்னிடம் முறையிட்டு நின்ற தேவர்களை நோக்கிய விஷ்ணு, `பாற்கடலை கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும்’ என்று உபாயம் கூறினார்.
இந்த வார்த்தையை கேட்டதும் தேவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, கவலையே மேம்பட்டது. பாற்கடலை கடைவதா? அது எப்படி முடியும் என்று கவலை கொள்ளத் தொடங்கினர். அதற்கான வழியையும் தாங்களே கூறும்படி மகாவிஷ்ணுவை பணிந்தனர்.
`மந்தாரகிரி மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு, பாம்பின் தலைப் பகுதியில் அசுரர்களும், வால் பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலை கடையும்போது அமிர்தம் கிடைக்கும்’ என்று வழியையும் தெரிவித்தார் மகாவிஷ்ணு. பாற்கடலை கடைய அசுரர்கள் உதவி அவசியம் என்றால், அவர்களுக்கும் அமிர்தத்தில் பங்கு தர வேண்டும்.
அப்படி கொடுத்தால் அவர்களும் சாகா வரம் பெற்றுவிடுவார்கள் என்பதால் தேவர்களின் கலக்கம் நீடித்தது. தேவர்களின் கலக்கத்திற்கான காரணத்தை அறிந்துகொண்ட மகாவிஷ்ணு, `கவலை வேண்டாம். உரிய நேரத்தில் உதவுவோம்’ என்று கூறியதை அடுத்து பாற்கடலை கடையும் பணி தொடங்கிற்று.
இந்த பணி ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது மத்தாக பயன்படுத்தப்பட்ட மந்தாரகிரி மலை ஒருபக்கமாக சரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று மந்தாரகிரி மலையை தாங்கிப்பிடித்தார். பின்னர் மீண்டும் பாற்கடலை கடைவது தொடர்ந்தது.
இதற்கிடையில் தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மறுபுறமும் மாறி, மாறி இழுத்ததன் காரணமாக வாசுகி பாம்பின் உடல் புண்ணாகி விட்டது. இதனால் ஏற்பட்ட வலியை பொறுக்க முடியாத ஆயிரம் தலைகளை கொண்ட வாசுகி, தனது ஆயிரம் வாய்களில் இருந்தும் விஷத்தை கக்கியது. அதே நேரத்தில் பாற்கடலை கடைந்ததன் காரணமாக கடலில் இருந்தும் விஷம் பொங்கி வெளியேறியது.
இவ்வாறு பாம்பினால் கக்கப்பட்ட `காளம்’ என்ற நீல விஷமும், கடலில் இருந்து பொங்கிய `ஆலம்’ என்ற கருப்பு விஷமும் சேர்ந்து கடுமையான வெப்பத்தையும், கடும் புயலையும் ஏற்படுத்தியது. இதனால் தேவர்களும், அசுரர்களும் அச்சத்தில் ஆளுக்கொரு பக்கமாக சிதறி ஓடினர். பின்னர் தேவர்கள் அனைவரும் கயிலைக்கு விரைந்தனர்.
அங்கு கயிலை வாயிலில் காவலுக்கு நின்ற நந்தி தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே சென்று ஆபத்து காலங்களில் எல்லாம் உலகை காத்து அருள்புரியும் சிவபெருமானிடம், அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன், தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகருமான அணுக்கத் தொண்டர் சுந்தரரை அழைத்து, `அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!’ என்று உத்தரவிட்டார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக மாற்றி கொண்டு வந்தார். உலகையே அச்சுறுத்திய கொடிய விஷத்தை ஒரு துளியாக மாற்றி, சுந்தரர் கொண்டு வந்ததை பார்த்து தேவர்கள் அனைவரும் அதிசயித்து நின்றனர். அந்த விஷத்தை வாங்கிய ஈசன், அதனை அருந்தினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பார்வதிதேவி பதற்றம் கொண்டாள்.
`கடும் விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே’ என்று கருதிய பார்வதி, சிவபெருமான் உண்ட விஷத்தை அவர் கழுத்திலேயே நிற்கும்படி தனது கரங்களால் கழுத்தை இறுக்கமாக பிடித்தார். இதனால் விஷம் சிவபெருமானின் கழுத்திலேயே தங்கி அந்த பகுதி நீல நிறமாக மாறியது. `கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் நீலகண்டர் என்ற பெயர் பெற்றார்.
விஷம் கொண்டுவந்த சுந்தரர், `ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் விஷத்தை சாப்பிட்ட தினம் கார்த்திகை மாதம் ஏகாதசி தினமாகும். அபாயம் நீங்கியதும் அன்று மாலை பொழுதில், தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய தொடங்கினர். மறுநாள் துவாதசி திதியன்று பாற்கடலில் இருந்து அமிர்தம் தோன்றியது.
மகாவிஷ்ணுவின் தந்திரத்தால் அந்த அமிர்தம் தேவர்களுக்கு மட்டும் கிடைத்தது. அதன் மூலமாக அவர்கள் இறவா நிலையை அடைந்தனர். ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியின் காரணமாக, அதற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து கடும் விஷத்தை உட்கொண்ட சிவபெருமானை, தேவர்கள் அனைவரும் மறந்து விட்டனர்.
தேவர் களின் இந்த தவறை அவர்கள் உணரும்படி பிரம்மதேவர் எடுத்துரைத்தார். குற்ற உணர்ச்சியால் வெட்கி தலைகுனிந்த தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலையை அடைந்து, கயிலைநாதனை தரிசித்து தங்களை மன்னித்து அருள வேண்டினர்.
இதனால் உளம் கனிந்து மகிழ்ச்சி அடைந்த ஈசன், நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே, அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அவர் புரிந்த நடனத்திற்கு `சந்தியா நிருத்தம்’ என்று பெயர். நந்தி தேவர் சுத்த மத்தளம் வாசிக்க, சரஸ்வதி வீணை மீட்ட, மகா விஷ்ணு புல்லாங்குழலையும், பிரம்மன் தாளத்தையும், மேலும் எண்ணற்ற இசைக்கருவிகளை பூதகணங்களும் வாசிக்க ஈசனின் இனிய நடனத்தை அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை துதித்து பாடி வணங்கினர்.
ஈசன் நடனம் புரிந்தது திரயோதசி தினத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஆகும். எனவே தான் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக
கருதப்படுகிறது.