விநாயகர் சதுர்த்தி

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்

உமாஸுதம் சோக வினாச காரணம்

நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

 

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.  விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.

எளிமையின் நாயகன்:

விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.

முழுமுதற் கடவுள்:

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் – O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கமாக இருக்கிறது. விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறார்க்ள்.

வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் பிள்ளையாருக்கு படைத்து வழிபடுகின்றனர். கூப்பிட்டால் வரும் பிள்ளையார் விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார். மண்ணோ, மஞ்சளோ பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார். விநாயகர் ஆதி பரம்பொருள். அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை. அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.

விநாயகர் சதுர்த்தி விரதம் விநாயகர் சதுர்த்தி விரதம் இருந்த பார்வதி தேவி சிவபெருமானை கரம் பிடித்தார் என்கின்றன புராணங்கள். இன்றைக்கும் பெண்கள் மனதில் நினைத்தவரை கணவராக கரம் பிடிக்க விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுபோன்ற விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.

விநாயகர் துதி பாடல்கள் :

வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்

நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு. #‎ஒளவையார்

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம்செய்

துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா. #ஒளவையார்

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை

புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே. #‎திருமூலர்

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்:

விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே

விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்

கண்ணில் பணிமின் கனிந்து #‎கபிலதேவநாயனார்

பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது

வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்

கடிகணபதி வர அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே. #‎சம்பந்தர்

திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்

சகட சக்கரத் தாமரை நாயகன்

அகட சக்கர விண்மனி யாவுறை

விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவோம். #‎கச்சியப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *