குரு சிஷ்யன் உறவு

குரு என்ற அருள் என்பது அவர் உடலின் வாழ்வு என்ற காலத்திற்கும், உடலின் சமாதி என்ற நிலைகளுக்கு அப்பால் எப்போதும் நிலைத்து நீடித்துக் கொண்டே இருப்பதாகும்.
குருவின் இருப்பை எவரும், அல்லும் பகலும், கண்டங்களை, வருடக் கணக்கினைக் கடந்தும் எப்போதும் உணரலாம். அவர் இப்போது இல்லை என்று உடலின் இருப்பை மட்டும் கருத்திலே கொண்டால், ஏமாற்றம் சீடனுக்கு மட்டுமே தான்.

எட்டவில்லை அறிவிற்கு என்றால் உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்துகொள்ளும்?
என்று குரு கேட்பதை மறக்கவே கூடாது.
நாம் இப்போது பல மகான்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறோம்.. வெவ்வேறான வடிவம் கொண்ட இறை அருளைப் பார்த்ததும், நமக்குள்ளே என்ன நிகழ்கிறது என்று கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும்.இன்னமும் கோடிக் கணக்கானோர் குருவின் முக்கியத்துவம் கேள்விப் படாதோரும் உலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது நாம் நமது வாழ்வோடு அருளுக்காகவும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்..
நமது கவனம் என்பது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, அந்த நிலையிலே நமக்கு வருகின்ற பல தகவல்கள், நாம் நோக்கிய சில விசயங்கள், நமக்குள் திணிக்கப்பட்ட சில விசயங்கள் என்று பல கட்டங்களிலே இருந்து நமக்குள் உலக விசயங்கள் வருகின்றன.
நமக்கு உலகில் வாழ பொருள் வேண்டி இருக்கிறது.. இப்போது நமது பொருளாதார நிலை, அரசியல் நிலை, மக்கள் வாழும் முறை, சமுதாயத்திலே இருக்கிற பல விசயங்களிலே நாம் கலந்துகொண்டே தான் ஆன்மீகத்திலும் உயரவேண்டி இருக்கிறது.
இருப்பினும், அருள் என்ற குருவின் நிலையிலே நாம் தியானித்து உயரும் போது, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைத்து சேகரித்த பணம், செய்தி, கௌரவம், பெருமை என்ற எதுவும் உதவப் போவதில்லை என்ற உணர்வு எப்போது வரும் என்றால், தியானத்திலே அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கி நிறுத்தி லயிக்கப் பழகும் போது தான்.
குரு என்ற அருளானது அந்த செயல்கள் செய்தவரைக்கும் இப்படித் தான் பதில் தந்தது என்று சொல்ல எந்த வரலாறும், செய்திகளும், சேகரிப்புகளும் நம்மிடையே இல்லை.
சீடர்கள் நடத்தும் நல்லது கெட்டதற்கு ஏற்ப வினை விளவு தர வேண்டிய வேலை இறை நிலைக்கு உண்டு என்பதால், நமது தன் முனைப்போடு நடப்பவைகளை பொருத்திப் பார்த்திருக்க வேண்டியதில்லை…
சீடனானவன் குருவைப் பணிந்ததால் தான் குருவாக ஆனான்… சீடர்கள் குருவை மட்டும் அலட்சியப் படுத்தியதால், குருவின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவிலே மாயை என்ற கோரப் பிடியிலே சிக்கி, சீடன் என்ற தகுதி இழந்து வாழ்ந்தோம் என்ற வரலாறு இன்றி முகவரி தொலைந்து மடிந்தோர்களிலே ஒருவராக ஆகிறான்..
குரு என்ற துடுப்பை விட்டு விட்டு, கப்பல் என்ற தியான பீடத்திலே, வாழ்க்கை என்ற கடலிலே சென்றால் என்ன செய்து விடப்போகிறான். மிஞ்சி மிஞ்சி ஆடம்பர வாழ்வும்,புலன் கவர்ச்சி கொண்ட வாழ்க்கை முறை தான்.
இப்போது நமக்கு புலன் கவர்ச்சி என்ற நிலை என்று தத்தளித்து, சீற்றம் தோன்றும் போதும், உடல் அழிவை நோக்கிச் செல்லும் போதும், அடடே நாம் இவ்வளவு நாளும் இப்படி ஏமாந்து விட்டோமே என்று சீடன் அலறுவான்… குருவிடம் செல்வான்… குரு சொல்வார்..
செயலுக்கு விளைவாய் தெய்வ ஒழுங்கமைப்பிருக்க தவறிழைத்து பின் பரமனைத் தொழுதால் என்ன ஆகிவிடப்போகிறது?
குரு என்பவர் மிகவும் புத்திசாலி. எது இருந்தால் மிகவும் நிம்மதியாக, சுகமாக வாழலாம் என்ற துல்லிய கணிப்புடன் வாழும் போதே தம்மை இறையோடு இணைத்து வாழ்க்கையிலே தானும் உயர்ந்து, ஒரு வழி காட்டியாய் சமுதாயத்திற்கும் பயனாகிறார்.
ஒருவர் காஞ்சி முனிவரிடம் சென்று” இன்னும் இந்த உலகில் துன்பம், துயரம், போர் எல்லாம் இருக்கின்றதே” என்றாராம்.
அவர் ” அட.. அப்படியா? ஒரு வேளை நான் செய்த தவம் போதவில்லை போலிருக்கு!”
குருவானவர் சொன்னார்.
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப்பொருள் கவர்ச்சி ஏதும் உள் நுழையா
இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? என்று.
நாம் புறப் பொருளாகக் காணும் எதுவும், நல்ல ஒரு தவத்திலே இருப்பதில்லை.. அது ஒரு குருவின் சீடர்கள் செய்யும் செயல்கள் வரை… இவ் விசயங்களைத் தாண்டியே அதாவது புறப் பொருளை உணரும் புலன் அறிவுக்குத் தாண்டி, உயிர் என்று நிலை கடந்து, அறிவாகப் பிரகாசிக்கிறது குருவின் இறை அருள்.
அங்கே அசைந்தாலே தவற விட்டு விடுவோம் குருவை/ இறையை…
குரு என்ற அருளை நோக்கி பக்தியுடன் அணுகிக் கொண்டே, தவத்திலே விழிப்புடன் இருக்கக் கற்றுக் கொண்டு, மனம் உயிர் என்ற நிலை கடந்து சென்றால் தான் குருவின் இருப்பிடத்திற்குச் செல்ல முடியும்… புலன் அறிவிற்கு குரு எட்ட மாட்டார். தன்னை அன்றி ஒரு பொருளும் இல்லை என்ற நிலையிலே இருந்து குரு விலகுவதே இல்லை…
நாம் புறப் பொருள்களிலே காணும் எதனோடும், குருவை பிடித்துக் கொண்டால் அன்றி தேறுவது கடினம். குருவானவர் நாம் காணும் புறப் பொருளை அவரும் பார்த்துக் கொண்டே தான் கடந்து சென்று இருக்கிறார். ஈசனின் நிலையிலே ஒன்றி விட்டவர் அவர்..
ஆனால், இந்த வான் காந்தக்களம் இருக்கிறது அல்லவா… இறை நிலையானது அங்கே எந்த ஒரு சீடனின் செயலையும் துல்லியமாக உள்ளது உள்ள படி கணக்கிட்டுக் கொண்டு செயலுக்கு விளைவு என்ற நியதியை தந்து கொண்டே இருக்கும்… இதிலே யாருக்கும் விதி விலக்கு இல்லை.
சரி… புலன் உணர்வுக்கு விளங்கும் உலகத்திலே நடக்கும் எதையும் எதற்காக நாம் சீரமைக்க வேண்டும். குருவை விடாதீர்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்?என்று கேட்டால்… அது கருணை நிலை தான்.
இதை புரிந்து கொண்டாலன்றி நமக்கு வேறு வழி ஏதுமில்லை.
எதனையும் விட குருவே உயர்ந்தவர் என்று குரு மீது அன்பு கொள்வோம்.. மலரும் சிவம் நமக்குள். வாழ்க வளமுடன்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *