ஆடி செவ்வாய்

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாயில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தென் மாவட்டங்களில் இன்றைக்கும் அவ்வையார் வழிபாடு நடைபெறுகிறது.
 

செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும்.

ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது என்பது பழமொழி. இதிலிருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேர்த்து நீராடுதலில் முக்கியத்துவம் விளங்கும் அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு.பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
 
தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
 
பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடிச்செவ்வாயில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார்.
 
இப்பூஜையில் செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு தர கூடாது. இந்த பூஜைக்கு புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும். பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
 
ஒரு நுனி இலையில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து படைக்க வேண்டும். பூஜையில் எத்தனை பெண்கள் கலந்து கொள்கின்றனரோ அத்தனை அடை கொழுக்கைடைகளை நெய்வேத்தியம் செய்து அதில் விளக்கு போட்டு பூஜை முடிந்த உடனேயே அதை சாப்பிட வேண்டும். இக்கொழுக்கட்டைகளில் உப்பில்லாவிட்டாலும் தேங்காய் நிறைய சேர்ப்பதினால் ருசியாகவே இருக்கும்.
 
அத்தோடு ஒரு தேங்காய் மூடியில் சிறிது தேங்காயை துருவி வைத்து கொழுக்கட்டைகளுடன் சேர்த்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
 
இத்தேங்காய் பூவையும் பெண்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்க கூடாது என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது.
 
பொதுவாக பூஜைகளில் கலந்து கொள்பவர்களில் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களே முன்னின்று செய்வார். அவரே இப்பூஜையில் மிக முக்கியமான ஒன்றான அவ்வையார் கதையை கூறுவார். இதனை பூஜையின் பொழுது மட்டுமே சொல்லி கேட்க வேண்டும்.இது இப்பூஜையின் வரலாற்று ஆரம்பத்தை சொல்லும் கதையாகும்.இதனை மூன்று முறை சொல்லி சூடம் ஏற்றி நெய்வேத்தியம் செய்து படையலை முடிக்க வேண்டும்.
 
அடுத்த நாள் விடியற் காலையிலேயே எழுந்து இந்த பூஜை செய்த இடத்தை சுத்தம் செய்து பிள்ளையார் மற்றும் பயன்படுத்திய இலைகளை யார் கண்ணிலும் படாமல் எடுத்து சென்று நீரில் கரைத்து விட வேண்டும். பூஜை செய்த நாளுக்கு மறுநாள் யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ தருதல் கூடாது. இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர். மணமாகாத கன்னியர்க்கும் குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம். பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
 
சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் இன்றைக்கும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆடி செவ்வாய்க்கிழமையன்று குமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி பிறப்பே செவ்வாய்கிழமையன்று பிறப்பதால் முதல் நாளில் இருந்தே அவ்வையார் பாட்டியை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.
 
அரிசியில் செய்யப்படும் இந்த கொழுக்கட்டை புரதச் சத்து அதிகம் கொண்டது. பெண்கள் உடல்நலத்துக்கு மிகவும் உகந்தது எனவேதான் இந்த கொழுக்கட்டை படையலை பெண்கள் மட்டுமே பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். ஆடி மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைத்தால் திருமணம் கைகூடும, பெண்களுக்கு செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *