வரலட்சுமி விரதம் பூஜை

⭐ வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த விரதம் ஆடி மாதம் வளர;பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கடைபிடிக்கப்படுகிறது.

⭐ நமக்கு செல்வத்தை அள்ளி தருபவள் ஸ்ரீ லட்சுமி தேவி. அவளை வேண்டி விரதம் இருப்பது நமக்கு நன்மையை அளிக்கும். வீட்டில் செல்வ வளத்தை பெருக்க ஒவ்வொரு வீட்டிலும் செய்யப்படும் ஒரு பூஜை தான் வரலட்சுமி பூஜை. வருடத்திற்கு ஒரு முறை அந்த பூஜை செய்யப்படும்.

வரலட்சுமி புராணக் கதை :

⭐ வரலட்சுமி விரதத்துக்கு புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார்.

⭐ பூவுலகில் சௌரா;டிரா நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால், அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள்.

⭐ சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள்.

⭐ சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள்.

வரலட்சுமி பூஜை :

⭐ வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும்.

⭐ அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் தீர்த்தத்தையும் நிரப்பலாம். மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். இவைகளை முதல் நாள் இரவே செய்ய வேண்டும்.

⭐ வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்க வேண்டும். பூஜை செய்பவர் வலது புறமாக இருந்து பூஜை செய்ய வேண்டும்.

⭐ சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.

⭐ எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே… என்று போற்றி மனம் உருக பாட வேண்டும். அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

⭐ பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

⭐ இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

வரலட்சுமி விரதமிருந்து லட்சுமியின் அருளைப் பெற்று வளமான வாழ்வை பெறுவோம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *