நந்தி என்பவர் யார் ?

நந்தி என்பது சிவபெருமானின் பெயரே. இதை திருமுறைகளில் நாம் உணரலாம். அந்த சிவபெருமானின் பெயரையே தன் பெயராகப் பெற்றவர் நந்தி தேவர். சிவ கணங்கள் அனைவருக்கும் தலைவர் நந்தி தேவரே. சிவாகமங்கள் அனைத்தையும் அறிந்தவரும் நந்தி ஒருவரே. சிவபெருமானே நேரடியாக சிவாகமங்களை நந்தி தேவருக்கு போதித்து அருள் செய்தார்.
சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான்
நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.
ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.
திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?
வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.
திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர்
சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை.
சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர்,
தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் செய்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார்.
இறைவன் அசரீரியாக “சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்!” என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார்.
சிவனருளை எண்ணி சிலாத முனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அக்குழந்தைக்கு நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினார்.
ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், “முனிவரே! பெட்டியை மூடித்திற” என்று கட்டளையிட்டருளினார். பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் திகழ்ந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.
பெற்றோர் அக்குழந்தைக்கு செபேசுவரர் என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார். சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன்,  வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார். செபேசுவரரின் அருமைத்  திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, செபேசுவரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிலைத்த பதினாறு பேறுகளையும் வரமாக அருளினார்.
நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்
மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடப நந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார், இறைவன். அதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாத முனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க  விரும்பினார்.
இறைவன் ஐயாறப்பர்; இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திர தினத்தில்
செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது.
இறுதியாக நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார் இறைவன்
ஐயாறப்பர். பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும்; முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும்; அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள்.
இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும்  நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும்
வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது.
நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.
தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான். சிவாலயங்கள் தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.
சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.
முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.
திருச்சிற்றம்பலம்.

One thought on “நந்தி என்பவர் யார் ?”

  1. வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன். வளர்க உங்கள் சிவ தொண்டு.திருச்சிற்றம்பலம். தில்லை யம்பலம். நன்றி ஐயா.

Leave a Reply to JN DARMARAJHU Cancel reply

Your email address will not be published. Required fields are marked *