காரடையான் நோன்பு

காரடையான் நோன்பு (இன்று) அன்று வீட்டை தூய்மை செய்து மாக்கோலமிட வேண்டும். வாசல் நிலை, சுவாமி அறை நிலைகளில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை அளிக்க வேண்டும்.

ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து அதனை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி, காட்டில் தன் கணவர் சத்தியவானுடன் வாழ்ந்த போது அங்கு கிடைத்த கார் அரிசியையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து வெண்ணெய்யுடன் இறைவன், இறைவிக்கு சமர்ப்பித்து வழிபட்டாள்.

அதனால் சிறிது வெண்ணெய்யுடன், விளைந்த நெல்லைக்குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, பின் அதில் துளசி இலையை சுற்றி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.

‘உருகாத வெண்ணெய்யும், ஓரடையும்
வைத்து நோன்பு நோற்றேன்
ஒரு நாளும் என் கணவன் என்னைப்
பிரியாமல் இருக்க வேண்டும்’

என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டி கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.

பிறகு தானும் கட்டிக் கொண்டு அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல் முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பு பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.

வைக்கோலுக்கு மரியாதை

காரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும்போது வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும்.

அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை உடலை காத்திரு என்று சாவித்திரி சொல்லி விட்டு வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *