இறைவழிபாட்டால் ஏற்படும் இழப்புகள்!

ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

‘‘தினமும் இறைவனுக்கு பூஜை செய்கிறீர்களே, அதனால் என்னென்ன லாபங்களை நீங்கள் பெற்றீர்கள்?’’ ‘‘உண்மையில் சொல்லப்போனால் நான் நிறைய இழந்திருக்கிறேன்.’’ ‘‘இழப்புகள்தான் அதிகமா? அப்படியானால் ஏன் தொடர்ந்து இறைவழிபாடு செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஆனால், நீங்கள் இழந்ததாகச் சொல்லும்போது உங்கள் குரலிலும், முகத்திலும் வருத்தமே இல்லையே! அத்தனை ஆழ்ந்த கடவுள் நம்பிக்கையா?’’

‘‘உண்மைதான். நான் இழந்தவை என்னென்ன தெரியுமா? முதலில் என் கோபம். அடுத்ததாக என் பொறாமை, எனக்குள்ளிருந்த வன்மம், சுயநலம் எல்லாம்தான்…’’
‘‘வந்து… நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’‘‘ஆமாம், இறைவழிபாட்டின்போது யார்மீதும் கோபம் எழுவதில்லை;  பொறாமைப்படுவதில்லை; எந்தப் பகையும் எனக்குள் நிழலாடுவதில்லை; ‘நான், எனது’ என்ற என் சுயநல எண்ணங்கள் தலை தூக்குவதேயில்லை…’’

‘‘சரி, இறைவழிபாடு முடிந்த பிறகு?’’‘‘உண்மைதான். நான் யதார்த்தத்துக்கு வந்துவிடுகிறேன். எனக்குள் பூஜையின்போது தோன்றாத தீய எண்ணங்கள் தலைதூக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதற்காகவே ஒரு பயிற்சி முறையாக நான் அடுத்த நாள் இறைவழிபாட்டு நேரத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பேன்.’’‘‘அதாவது, இறைவழிபாட்டு நேரத்தில் மட்டும் உங்கள் தீய குணங்களை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள்?’’
‘‘அப்படித்தான். ஆனால், தினமும் பூஜையும் அந்த நேரத்தில் என்னை சுத்தப்படுத்திக்கொள்வதுமான பழக்கமும் அழுத்தமாக எனக்குள் விதைக்கப்பட்டுவிடுகின்றன. இதனாலேயே பிற நேரங்களிலும் அந்த தீய எண்ணங்கள் என்னுள் உருவாகும்போது என்னையே நான் வித்தியாசமாக நோக்குவேன்.

கோபத்தை இழந்த பிறகு, எனக்கு நண்பர்கள் நெருக்கமானார்கள்; பொறாமையை இழந்தபோது என்மீது அக்கறை கொள்பவர்கள் அதிகமானர்கள்; வன்மம், சுயநல உணர்வை இழந்த பிறகு எனக்கு சமூகத்தில் நன்மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதாவது, நான் இழந்தவை மூலமாக அந்தக் கடவுளே பல லாபங்களை எனக்கு ஆசீர்வதித்திருக்கிறார்…’’‘‘தினசரி இறைவழிபாட்டால் நன்மைகள்தான் அதிகம் போலிருக்கிறதே!’’

‘‘உண்மைதான். எது இல்லாவிட்டாலும் மனம் அமைதியாகும். அலைபாய்வதிலிருந்து விடுபடும். எல்லோரிடமும் அன்பு பாராட்ட முடியும்; எந்த விஷயத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்; சரியான நடவடிக்கையை எடுக்க முடியும்-குறிப்பாக அடுத்தவரை பாதிக்காமல்!’’‘‘இனிமேல் நானும் இறைவழிபாட்டில் தினமும் சில நிமிடங்கள் செலவிடப்போகிறேன்; சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் வெகுமதியாகப் பெறப் போகிறேன்!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *