ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும்.

ஆண்டாள் அவதரித்த நாள் :

✳ ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், கலியுகம் பிறந்து 98வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும், பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார், ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

✳ ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும்.

✳ ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர்.

✳ பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.

✳ அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். ஆடிப்பூரம் அன்று பூமி தாயினை வழிபட்டு அவளின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

ஆடிப்பூர வழிபாட்டின் நன்மைகள் :

✳ எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

✳ அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும்.

✳ ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது.

✳ ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர்.

✳ ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.

நடைபெறும் சிறப்பு தலங்கள் :

✳ அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் நடைபெறும்.

✳ விரைமலர், குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும்.

✳ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, கூழ் வார்க்கப்படும்.

சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற ஆண்டாள் பாதம் பணிவோம்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *