காமத்தை வெல்வது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் கடவுளை நெருங்க விடாமல்..நம்மை உலக இச்சையின் பக்கம்
இழுத்துக்கொண்டு போகும் மிகப்பெரிய ராவணின் அஸ்திரம்..யுத்தத்தில் லக்ஷ்மணனை மூர்ச்சை இழக்க செய்த நாக அஸ்திரம் இதுதான்..விகாரங்களில் மிகப்பெரிய அஸ்திரம் காமம்..இதனால்தான் தெய்வங்களில் அவர்களின் தலைக்கு பின்னாலோ,காலுக்கு அருகிலோ காமம் என்ற பாம்பை வென்றதன் அடையாளமாக மிகப் பெரிய விஷப்பாம்பை காண்பித்து உள்ளனர்.. இந்தகாமம் என்பது மனதில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ.விதைத்துள்ள இச்சையின் விதை..இதை ஆரம்பத்தில் நாம் நீக்காவிட்டால் இது நம்மை மூர்ச்சை இழக்க செய்துவிடும்.. மூர்ச்சை என்றால் நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத நிலை.

 இதனால்தான் காமம் மகா சத்ரு என்று கீதை சொல்கின்றது..கடவுளின் அருகில் செல்ல வேண்டுமானால் ஒருவர் முதலில் காமத்தை விடவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, உண்மையில் காமத்தை வெல்வது எளிது.. ஆனால், எப்பொழுதும் நம்முடைய மனதை பிஸியாக வைத்துக் கொள்பவருக்கே இது சாத்தியம்..ஏதாவது ஒரு ஆன்மீக பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்.எங்கே காமம் உற்பத்தி ஆகின்றதோ முதலிலேயே எச்சரிக்கையாகி மனதை அதிலிருந்து விலக்க வேண்டும்..காமத்தை பஸ்மம் ஆக்கும் பரமாத்மா ஜோதியான தந்தை சிவபெருமான் மீது மனதை செலுத்தவேண்டும்..மன்மதனின் காமபாணம் சிவபெருமானிடம் செல்லுபடி ஆகவில்லை.. எனவே, மனம் இறைவன் மீது ஈடுபட..நம்முடைய மனம் சுத்தமடைய வேண்டும்.
முதலில் நம்முடைய கண்கள் எதிலாவது மூழ்கும் பொழுது அங்கேதான் காமம் உற்பத்தி ஆகின்றது..கண்கள் பார்த்து மனதிற்கு கொண்டு செல்லும்பொழுது அங்கே இச்சை உற்பத்தி ஆகின்றது.அந்த இச்சையின் சிறிய விதை பெரிய காமத்தின் விஷ விருட்ஷமாக வளர்ந்துவிடும்..அதில் உட்காரும் ஆசை என்னும் குரங்கு..ஒவ்வொரு கிளையாக தாவி விளையாட ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒரே கிளையில் அமராது.. ஒன்றை பார்க்க இன்னொரு கிளை அதற்க்கு அழகாக தோன்றும்..காமம் ஒருவருக்குள் வந்துவிட்டால்.. அவர் காலப்போக்கில் எல்லோர் மீதும் அதை செலுத்த ஆரம்பித்து விடுவார்.. அதற்காக அவர் பல காரணங்களை சொல்வார்.
எங்கே காரணம் இல்லையோ,அங்கேதான் நிவாரணம்.. ஒருவரின் தேகத்தின் மீது பார்வை செல்லும் ஒருவருக்கு காமம் உற்பத்தி ஆகும்..உங்கள் கண்கள் எதிலும் மூழ்க கூடாது.எதில் உங்கள் கண்கள் நிலைபெருகின்றதோ அதனுடைய காட்சி உங்களை அறியாமல் உங்களிடம் நாள் முழுவதும் தென்பட்டுக்கொண்டே இருக்கும்.. எனவே, இறைவனின் கட்டளை உன்னை உடல் என்று உணராமல், நெற்றியின் மத்தியில் ஆன்மா என்றே உணர்ந்துகொள்..பிறரையும்
அப்படியே பார்க்க பழகு..பிறகு தேகத்தின் கவர்ச்சி ஒன்றும் செய்யாது.
இந்த உலகில் ராமனை போன்ற ஒரு சிலரே உள்ளனர். ராவணை போன்ற அநேகர் உள்ளனர். காரணம் இது ராவண ராஜ்ஜியம்..ராம ராஜ்யம் அல்ல.. ராவணின் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை என்னும் ஆயுதங்களில் முதல் ஆயுதம் காமம்..இதை வெல்லவேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிகள் வீட்டை விட்டு காட்டுக்கு சென்றார்கள், ஆனால் இறைவன் சிவபெருமானின் வாக்கு இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர்போல பற்றற்று அன்புடன் ஆத்ம அபிமானத்துடன் இருந்து மனதை ஜோதியான என்னிடம் செலுத்து என்பதே ஆகும்..பெரிய..பெரிய.. மன்னர்கள் கூட தன்னுடைய ராஜ்ஜியத்தை காமத்தினால் இழந்தனர்.
ஒரு காமம் வாழ்க்கையில் சத்திய நாசம் செய்துவிடும்.. காமம் உள்ளுக்குள் வந்துவிட்டால் அவன் பலவிதங்களில் பொய் பேச ஆரம்பித்து விடுவான்,அவன் காமத்தை நல்லது என்று அதன் பக்கம் பேசுவான்..இன்று இந்த உலகம் பொய்யாக மாறியதற்கு முக்கியகாரணம் காமம்..இந்த உடலும் பொய்..இந்த உலகமும் பொய்..இல்லற தர்மத்தை இறைவனுடைய வழியில் மீறாமல் இருப்பதே புருஷ லட்சணம்.. சத்தியவானை மீட்ட சாவித்திரியின் லட்சணம்.. ஆபாசத்தை பார்ப்பவர் ஒன்றோடு நிறுத்துவது இல்லை மேலும், மேலும், பார்த்துக்கொண்டே இருப்பார் இதை பார்க்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஒழுக்கமான கணவன் மனைவியாக கண்டிப்பாக வாழ முடியாது.
இவ்வளவு விவாகரத்து வழக்குகளுக்கும் காமமே கதாநாயகன்.. காமத்தினால் நிரந்தர சந்தோசப்பட்டவன் ஒருவனுமில்லை..ரிஷிகள் கூட காக்கையின் மலத்திற்கு சமமான சுகம் என்றே சொல்கின்றனர்..எனவே, மனதை சுத்த எண்ணங்களில் நிரப்பி ஜோதியான பரம் பொருள் சிவபெருமானை நினைத்து அவரை மகிழ்வுற செய்வோம்..கடவுளே மகிழ்ந்து விட்டால் வேறென்ன வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *