ஆடிக் கிருத்திகை

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடிக் கிருத்திகை தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. அறுபடை வீடு தலங்களிலும், சென்னையில் உள்ள முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகனுக்கு உகந்த கிருத்திகை

முருகப் பெருமானுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில், தை கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விழாக்கள் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ஆடி கிருத்திகை தினம் மிகவும் விசேஷமாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள, முருகன் கோவில்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகை விரதம்

தை மாதக் கார்த்திகையை விட ஆடி மாதக் கார்த்திகை சிறப்பானதாக உள்ளது. இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

அறுபடை வீடுகள்

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகையும் விழாவும் ஒன்று. முக்கியமாக திருத்தணியில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருத்தணியில் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி ரயில், பஸ் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி நகரில் குவிந்தனர். ஆடி பரணி நட்சத்திரதினமான நேற்று அதிகாலை திருத்தணி தணிகை முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அலங்காரத்தில் முருகன்

முருகனுக்கு தங்க கவசமும் வைர கிரீடமும் பச்சை மரகத கல்லும் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மலைக்கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் பலவகை மலர்களாலும் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

3 thoughts on “ஆடிக் கிருத்திகை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *