உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் மூன்றாவது திருத்தலம்.

புராண பெயர்(கள்): பிட்சாண்டார் கோயில்; உத்தமர் கோயில்; திருமூர்த்தி ஷேத்திரம்; நீப ஷேத்திரம்
பெயர்: திருக்கரம்பனூர் உத்தமர் திருக்கோயில்
ஊர்: திருக்கரம்பனூர்
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
மூலவர்: புருஷோத்தமன் (தமிழில் உத்தமர்), கிழக்கு நோக்கிய புஜங்கசயனம்.(பெருமாள்)
பிட்சாடனர் (சிவன்)
தாயார்: பூர்வாதேவி, பூர்ணவல்லி (தாயார்), பார்வதி
தல விருட்சம்: கதலி (வாழை மரம்)
தீர்த்தம்: கதம்ப தீர்த்தம்
ஆகமம்/பூஜை: வைகானஸம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
தொன்மை: ஏறத்தாழ 1000 வருடங்களுக்கு முன்பானது

பெயர்ச்சிறப்பு

மும்மூர்த்திகளையும் தன்னிடத்தே கொண்டுள்ள இத்திருத்தலம் பல சிறப்புப் பெயர்களையும் கொண்டுள்ளது.

🌺 கடம்ப மரங்கள் அதிகமிருந்தமையால், கடம்பனூர் என வழங்கப்பெற்று பிறகு அது கரம்பனூர் எனவும், திருக்கரம்பனூர் எனவும் ஆனது என்பர்.
🌺 இதுவே வடமொழியில் நீப ஷேத்திரம் என்றானது.
🌺 புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது.
🌺 சிவபெருமான் திருவோடேந்தி பிட்சை கேட்ட திருக்கோலத்தில் எழுந்தருளியமையால், பிட்சாடனர் கோயில் எனலாயிற்று.
🌺 மும்மூர்த்திகளும் காட்சியளிக்கும் காரணத்தால் மும்மூர்த்தி ஷேத்திரம் எனவும் இது வழங்கப்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புகள்

🌺 பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர்.
🌺 முற்காலத்தில் இத்திருத்தலம் கதவுகளே அற்று இருந்ததாகவும், அதனால் எந்நேரமும் இறைவனைத் தொழுதிட இயன்றிருந்தது எனவும் பெரியவாசன் பிள்ளையின் குறிப்பொன்று கூறுகிறது.

சந்நதிகள்

🌺 பெருமாள் சந்நதி
🌺 தாயார் சந்நதி
🌺 சிவன் சந்நதி
🌺 பார்வதி சந்நதி
🌺 பிரம்மா சந்நதி
🌺 சரஸ்வதி சந்நதி

தல வரலாறு

இத்தலத்திற்குப் பல வரலாறுகள் உள்ளன. ஆதிபிரம்ம புராணத்திலேயே இக்கோயில் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

தம்மிடம் மிக்க பக்தி செலுத்தி வரும் பிரம்மாவைச் சோதிக்க விஷ்ணு கடம்ப மரமாக உருவெடுத்து இங்கு வந்ததாகவும், அவ்வுருவிலும் பிரம்மா அவரை அறிந்து கொண்டு தொடர்ந்து வழிபட்டமையால், மனம் மகிழ்ந்த விஷ்ணு அவருக்கு இங்கு தனி வழிபாட்டு சந்நிதி கொள்ளுமாறு செய்ததாகவும் கூறுவர். இந்தியாவில் மிகச் சில இடங்களிலேயே பிரம்மா மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு தனிக் கோயில்களோ, சந்நதிகளோ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோயிலில், சிவன் பிச்சாடனாராக உருக்கொண்டமைக்கும் ஒரு வரலாறு உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்ததாகவும், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் அவரது கையோடு ஒட்டிக் கொண்டதாகவும், சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மகாலட்சுமியைக் கொண்டு பிச்சையிடச் செய்ததால் அச்சாபம் நீங்கியதாகவும் கூறுவதுண்டு.

தலச் சிறப்புகள்

🌺 சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என அனைவருக்கும் இங்கே தனிச் சன்னதிகள் உள்ளன.
🌺 பிஷாடண மூர்த்தியாக சிவன் காட்சியளிப்பதால் பிஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
🌺 திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர்.
🌺 அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இத்தலம் பற்றிப் பதிகம் பாடியுள்ளனர்.
🌺 மதுரை மெய்ப்பாத புராணிகர் இயற்றிய தலவரலாறினையும் இது கொண்டுள்ளதாகக் கூறுவர்.
🌺 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்றாகும்.
🌺 திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோவில்

திருத்தலப் பாடல்கள்

திருமங்கையாழ்வார் தமது ஒரு பாசுரத்தால் பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்வித்தார். திருமங்கையாழ்வாரின் பாசுரம் ஒன்று கீழே.

_பேரானைக் குறுங்குடியெம்_
_பெருமானை, திருத்தண்கால்_
_ஊரானைக் கரம்பனூர்_
_உத்தமனை, முத்திலங்கு_
_காரார்திண் கடலேழு_
_மலையேழிவ் வுலகேழுண்டும்_
_ஆராதென் றிருந்தானைக்_
_கண்டதுதென் னரங்கத்தே_

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள நீலகண்டப் பெருமானைப் பற்றிய பதிகங்களை அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இயற்றியுள்ளனர். அவற்றின் குறிப்பு பின்வருமாறு:-

🌺 திருஞானசம்பந்தர் – ஆரிடம்பாடி -3 -14
🌺 திருநாவுகக்கரசர் – உடையர் -5 -41
🌺 சுந்தரர் – காருலாவிய -7 -36

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிஷாடனர் நவமணிமாலையின் ஒரு பகுதியினைக் கீழே காணலாம்:

_இப்பாத் திரந்தலை கீழாப் பிடித்தனை யென்னைமுனந்_
_தப்பாப் பலிகொண் டறிந்திலை யோவெனத் தாழ்குழலாள்_
_செப்பார் பணைமுலை யாய்நிலத் தேபலி சிந்தியிட்டா_
_யெப்பாத் திரத்திலு மிட்டறி யாய்கொன்முன் னென்றனரே_
_வேட்டன மாதுகை தாழ்த்திட மாமுது வெற்பர்பலி_
_யோட்டினை நீதொட லாமோ வெனவுமை யுந்தொடலாம்_
_வீட்டினில் யானென வேயவர் தாமிது வேண்டுவைகொல்_
_யாட்டினின் பாலென மூலமு மாமென்ப தென்றனரே_

தலபெருமை

பிரம்மன் சன்னதி: படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கி தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, “நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்’ என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.

பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.

மும்மூர்த்திகள் தலம்: விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லி தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தனித்தனி சன்னதிகளில் அம்பாள்களுடன் காட்சி தருகின்றனர். ஒரே தலத்தில் மும்மூர்த்திகளையும் தரிசனம் செய்வது அபூர்வம். கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது.

சிவகுரு தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு குரு வரதராஜர், குரு பிரம்மா, சக்திகுரு சவுந்தர்ய பார்வதி, ஞானகுரு சுப்பிரமணியர், தேவகுரு வியாழன், அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆகிய ஏழு குரு சுவாமிகளும் குருவிற்குரிய இடங்களில் இருந்து அருளுகின்றனர். குருப்பெயர்ச்சியின்போது ஏழு குருக்களுக்கும் விசேஷ அபிஷேகங்கள் நடக்கிறது. எனவே இத்தலம் “சப்தகுரு தலம்’ எனப்படுகிறது.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, நிவேதனம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

பொது தகவல்

சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் “பிச்சாண்டார் கோயில்’ என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் “கதம்பனூர்’ என்றும் “கரம்பனூர்’ என்றும் அழைக்கப்படுகிறது. கணவனும், மனைவியும் இல்லறவாழ்க்கையில் சேர்ந்து வாழ்வதே உத்தமம். இவ்வாறு ஒருவருக்கொருவர் இணக் கமாக வாழ்பவர்களை உத்தமர் என்பர். இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்த லத்தை “உத்தமர் கோயில்’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை.

சிவன்-பெருமாள் வீதி உலா!

பக்தர் ஒருவருக்காக பிரம்மா, சிவன், திருமால் என மூன்று தெய்வங்களும் காட்சித் தந்த தலம், உத்தமர் கோயில். தன் மனைவி சரஸ்வதியுடன் பிரம்மா அருள்பாலிக்கும் இத்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகைத் திருநாளன்று சிவனும், பெருமாளும் சேர்ந்து வீதி உலா வருவது தனிச் சிறப்பு.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *