திருவெள்ளறை என்பது திருச்சிராப்பள்ளிக்கு அருகிலே துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இங்கு புண்டரீகாக்ஷன் என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

திருச்சியிலிருந்து துறையூர் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்ச நல்லூர்க்கு அருகில்மை ந்துள்ள இத்திருத்தலத்திற்கு திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில்.இக்கோயில் காண்போரை பிரமிக்க வைக்கும்.நந்த வனங்கள்,கிணறு இன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின் சில பகுதி குடைந்து தூண்கள் மற்றும் இரு அறைகள் காண்ப்படுகின்றன.

இத்தலம் மிகவும் தொன்மையான தலங்களில் ஒன்றாகும். திருவரங்கத்திற்கும் பழமையானது என்பதாலேயே ஆதிவெள்ளறை என்றும் அழைக்கபடுகிறது. வெண்மையானா பாறையினால் ஆன மலை எனப்பொருள்பட வெள்ளறை எனப்படுகிறது. திரு என்பது உயர்வை குறிக்குமாதலால் ‘திருவெள்ளறை’ என அழைக்கப்படுகிறது.

மூலவர்: புண்டரீகாக்ஷன் – செந்தாமரைக் கண்ணன், நின்ற திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம்.
தாயார்: செண்பகவல்லி என்கின்ற பங்கயச் செல்வி. தாயாருக்குத் தனிச் சன்னிதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம்.
தீர்த்தம்: திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளாகவே அமைந்துள்ளன.
தல விருட்சம்: வில்வம்
விமானம்: விமலாக்ருதி விமானம்.
ஊர்: திருச்சிராப்பள்ளி
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை

தல வரலாறு

ஒரு முறை திருப்பாற்கடலில் மகாவிஷ்ணுவும், மகாலட் சுமியும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பெருமாள், “”லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இதனால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு வேண்டிய வரத்தை என்னிடமிருந்து கேட்டு பெறலாம்” என்கிறார். அதற்கு லட்சுமி, “”தங்களின் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு” என்கிறாள்.இருந்தாலும், எனது பிறந்த இடமான இந்த பாற்கடல். இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்கிறாள். அதற்கு பெருமாள், “”உனது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். இருந்தாலும் பூமியில் சிபி சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும்போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன்” என்கிறார். ஒரு முறை இந்தியாவின் தென்பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்து வந்தார்கள். அவர்களை அடக்க சிபி சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் போது ஒரு வெள்ளை பன்றி அவர்கள் முன் தோன்றி இவர்களுக்கு பெரும் தொந்தரவு கொடுத்தது. படைவீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் போக, சக்ரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடம் பிடிபடாமல் இங்கு மலைமீதுள்ள புற்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது, ஒரு குகையில் மார்க்கண்டேய முனிவர் கடுமையாக தவம் செய்து கொண்டிருப்பதை கண்டு அவரிடம் விஷயத்தை கூறினான். அதற்கு முனிவர்,””நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு தான் நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக (பன்றி) உருவத்தில் உனக்கு காட்சி கொடுத்திருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய்” என்கிறார். அரசனும் அப்படியே செய்ய நாராயணன் தோன்றி அனைவருக்கும் காட்சிகொடுக்கிறார். இந்த தரிசனத்திற்கு வந்த மகாலட்சுமியிடம்,”” நீ விரும்பியபடி இத்தலத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்து விட்டு, அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள்பாலிக்கிறேன்” என்கிறார் பெருமாள்.இதன் பின் அரசன் அனைவரிடமும் விடைபெற்று ராவண ராட்சஷர்களை அழிக்க சென்றான். ஆனால் மார்க்கண்டேயர், இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டை ஆள செல் என்கிறார். ஆனால் மன்னனுக்கு மனம் திருப்தி அடையவில்லை. அதற்கு மார்க்கண்டேயர்,””உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோயில் கட்டி திருப்தி பெறுக” என்கிறார். அரசனும் கோயில் கட்டி, சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தான். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள், அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம். நானே இறந்தவருக்கு பதிலாக 3700 பேரில் ஒருவராக இருந்து, நீ நினைத்த மூவாயிரத்து எழுநூறு குடும்பக்கணக்கு குறைவு படாமல் பார்த்து கொள்கிறேன் என்கிறார். பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு, திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

தலபெருமை

108 திருப்பதிகளுள் ஒன்றான இத்தலத்தில் உய்யக்கொண்டார் எங்களாழ்வான் அவதாரம் செய்துள்ளார். இங்குள்ள பெருமளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது. அடுத்த கோபுர வாயிலில் 4 படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது. பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி “தட்சிணாயணம்’ ஆடி முதல் மார்கழி வரை திறந்திருக்கும். இரண்டாவது வழி “உத்தராயணம்’ தை முதல் ஆனி வரை திறந்திருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. பலிபீடத்தின் முன் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டிக்கொண்டு, நிறைவேறிய பின் “பலிபீட திருமஞ்சனம்’ செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் “புத்ரபாக்கியம்’ நிச்சயம் என்பது ஐதீகம். இத்தல பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருக்கு மேல் உள்ள விமானம் விமலாக்ருத விமானம் எனப்படும். இவரை கருடன், சிபி, மார்க்கண்டேயர், பிரம்மா, சிவன் ஆகியோர் தரிசனம் செய்துள்னர்.

தல சிறப்பு

கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 4 வது திவ்ய தேசம்.

திருவிழா

சித்திரை கோடை திருநாள் சித்ராபவுர்ணமி, கஜேந்திர மோட்சம், ஆவணி ஸ்ரீஜெயந்தி வீதியடி புறப்பாடு, பங்குனி திருவோணம் நட்சத்திரத்தில் பிரமோற்சவம்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்

நிறைவேறிய பின் “பலிபீட திருமஞ்சனம்’ செய்து பொங்கல் படையல் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுவார்கள்.

சிறப்பம்சம்

எங்குமில்லாத வகையில் இக்கோயிலில் உத்தராயண வாசல் என்றும் தட்சிணாயன வாசல் என்றும் இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆனி முதல் மார்கழி வரை தட்சணாயன வாசல் வழியாகவும் கோயிலில் பெருமானைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.

சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) பெருமாள் காட்சி தந்ததால் பெருமாளுக்கு ச்வேதபுரிநாதன் என்று பெயர் ஏற்பட்டதாக தலபுராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே இத்தலத்திற்கும் ஸ்வேதபுரி நட்சத்திரம் என்றும் பெயர் வந்தது.

சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் இவர்களுக்குத் தனிச்சன்னிதிகள் உள்ளன. ஸ்ரீதேவி, பூதேவி, சூர்ய சந்திரர்கள், ஆதிசேசன் முதலியவர்கள் மனித உருவில் வந்து பக்கத்தில் நின்று கைங்கர்யம் செய்வது தனிச்சிறப்பு.

ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் பெருமை. இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’. தாயாருக்கு சிறப்பம்சம் உள்ள இவ்விடத்தில் அவரை வணங்கிய பின்னே இறைவன் சந்நதிக்கு செல்ல இயலும்.பல்லக்கு புறப்பாடு ஆகும்பொழுதும் தாயார் பல்லக்கு முன்செல்ல, மூலவர் பல்லக்கு அதை தொடர்ந்து செல்லும். மற்ற இடங்களில் பெருமாள் முன் செல்ல தாயார் பின்தொடர்வார்.

விஞ்ஞானம் அடிப்படையில்: கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

மங்களாசாசனம்

பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர். மொத்தம் 24 பாசுரங்கள்.

திருவெள்ளறை அழகன் (பெரியாழ்வார் பாசுரம் 192 – காப்பிடல்)
இந்திரனோடு பரமன் ஈசனிமையவ ரெல்லாம், மந்திர மாமலர் கொண்டு மறைந்தவ ராய்வந்து நின்றார், சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய், அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்.

பொது தகவல்

கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால்வெள்ளறைஎன்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாகதிருவெள்ளறைஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார். இதனாலேயே இங்குள்ள பெருமாள் புண்டரீகாட்சப்பெருமாள்ஆனார்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *