இறைவன் : தாண்டேஸ்வரர்

இறைவி : அங்காளம்மன்

தீர்த்தம் : அக்னி தீர்த்தம்

தலவிருட்சம் : வில்வம், மயில்கொன்றை

 

அமைவிடம்:

திருவண்ணாமலையிலிருந்து அவலூர்பேட்டை வழியாக 35 கிலோமீட்டர் தூரத்திலும், செஞ்சியிலிருந்து வளத்தி வழியாக வடக்கே 20 கிலோ மீட்டர் தூரத்திலும், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக 160 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது மேல்மலையனூர்.

தலவரலாறு :

போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்பையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர். தண்டகாருண்யத்தின் மையப் பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும். தண்டகாருண்ய பகுதிகளே சோழமண்டலத்தில் தொண்டைமண்டலம் மற்றும் நடுநாடுப் பகுதிகளாக கடையேழு வள்ளல்களால் ஆளப்பட்டன. கடையேழு வள்ளல்களின் பாரம்பரியத்தில் வந்த ஒரு சிறந்த சிற்றரசனே “மலையன்” என்பவராவார். இவர் தண்ட காருண்யத்தின் மையப் பகுதியான பூங்காவனத்தை ஆட்சி புரிந்துள்ளார். தண்டகாருண்ய பகுதிகள் பெரும்பாலும் பூமிக்குமேல் மலைப்பகுதியை கொண்டதாகும். மேல்மலைப்பகுதியை ஆண்ட மலையன் என்பாரின் பெயராலேயே மலையன் ஊர் மலையனூர் என்ற காரணப்பெயரானது. மேல்மலையனூரில் மலையன் ஆட்சிபுரிந்த காலத்தில் ஏற்படுத்திய கோட்டை கொத்தளங்களின் அடிச் சுவடுகள் இருந்தன. இன்றும் மேல்மலையனூரில் ஒரு தெரு வின் பெயர் கோட்டை மே ட் டு த் தெரு என்று இருப்பது இதற்கு சான்றாக அமைகிறது.

மேல்மலையனூர் அங்காளம்மனை பூங்காவனத்தாள் என்றே அழைத்து வழிபாடு செய்துள்ளனர். இதற்கு சான்றாக பதிற்றுப்பத்தில் பத்து பாடல்கள் கொண்ட பதிகப்பாடலில் “பூங்காவில் ஊனுழலுரை ஒங்கார சக்தியே பூங்காவனத் தாயே” என்று ஒவ்வொரு பாடல் முடிவிலும் அமைகிறது. மேல்மலையனூரின் வடகிழக்கு பகுதியில் அடிகள் மிகவும் பழமை வாய்ந்த “அக்னி தீர்த்தம்” என்ற திருக்குளம் அமைந்துள்ளது.

புராண வரலாறு

ஆதிகாலத்தில் சிவபெருமானைப்போன்று பிரம்மனுக்கும் ஐந்துதலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப்போன்று இருந்த அவன் ஒருசமயம் கயிலைக்குச் சென்றான். வந்திருப்பது தனது பதியே என நினைத்த பார்வதி தேவி, பிரமனை வணங்கி அவனுக்குப் பாதபூசை செய்தாள்.

அவ்வமயம் சிவபெருமான் வந்து சேர்ந்திட, பார்வதி தனது தவற்றை உணர்ந்தாள். பின்பு பிரம்மனுக்குத் தண்டனை அளிக்க உறுதிகொண்டு பெருமானை வணங்கி, சுவாமி இவன் தங்களைப்போன்று உள்ளான். அறியாமல் நான்

செய்த பூஜைக்கு இவன் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

அதற்குக் கழுவாயாக இவனது ஒரு தலையைக் கொய்துவிட வேண்டும் என்று வேண்டி பணிந்தாள். பெருமான், பிரமனின் ஒரு தலையைக் கிள்ளியெறிந்தார். இதனால் அவரைப் பிரம்மஹத்தி தோஷம் பற்றிற்று. கீழே விழுந்த தலை சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டது. தனது கணவனின் நிலையறிந்த சரஸ்வதி தேவி கோபமுற்று, பிரம்மஹத்தி தோஷத்தால் மயானந்தோறும் அலைந்து திரிவீராக என்று பெருமானைச் சபித்து தனது கணவனின் தலையைக் கொய்திடக் காரணமாயிருந்த பார்வதியை நோக்கி நீ செடி கொடிகளை அணிந்து கோரமூபமாய் கான கத்தில் அலைந்து திரி க என்று சபித்தாள். பிரம்மஹத்தியினால் பீடிக்கப்பட்ட பெருமானின் கையில் விழும் உணவை பிரம்மகபாலம் புசிக்கத் துவங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி, தாகத்தால் காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார். மயானங்களுக்குச்சென்று

சாம்பலை உடலில் பூசிக்கொண்டார்.

பார்வதி தேவி, திருமாலிடம் சென்று முறையிட்டு சாப விமோசனத்திற்கான வழியைக் கேட்டறிந்தாள். பின்னர் சிவபெருமானுடன் சென்று தண்டகாருண்யத்தை அடைந்து அங்குள்ள மயானத்தினருகில் ஒரு தீர்த்தமுண்டாக்குமாறு கூறினாள். பெருமான் தனது சூலாயுதத்தால் ஒரு தீர்த்தமுண்டாக்கினார் அத்தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது. அங்கு தேவி உணவு வகைகளைத் தருவித்து மயானத்தில் சூறையிட்டாள். அந்த உணவையருந்த பெருமானின் கையைப் பற்றியிருந்த பிரம்மகபாலம் கீழே இறங்கியது. கபாலம் இறங்கியதும் பெருமான் தீர்த்தத்தில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். அப்போது கபாலம் பார்வதி தேவியைப் பற்றிக் கொண்டது. தேவி பேருருவங்கொண்டு தனது காலால் கபாலத்தை மிதித்து பின்பு அதனையெடுத்து மாலையாகக் கழுத்தில் அணிந்துகொண்டாள். அப்போது தேவியின் கோர உருவம் அவளைவிட்டு விலகியது. அந்த திருவுருவமே அருள்மிகு அங்காளம்மன் ஆகும்.

கபால மாலை தரித்து கோபத்துடன் விளங்கிய

அங்காளம்மனைச் சாந்தம் செய்து மதியில்லாத காரிருள்

நாளில் உணதருள் வேண்டி மக்கள் வருவர். நீ இவ்விடத்தே எழுந்தருளியிருந்து அவர்களுக்கு அருள்செய்து வருக என்று பார்வதி தேவி கூறியருளினாள். அதன்படி அங்காளம்மனும் பிரம்மஹத்தி தோஷத்தைத் தாண்டிய பெருமான் தாண்டேசுவரர் எனும் திருப்பெயருடனும் அவ்விடத்து எழுந்தருளியிருந்து அங்கு வந்து வணங்கும் உயிர்களுக்குக் கருணை செய்து வரங்களை அருளி வருகின்றனர்.

பிரம்ம ஹத்தி தோஷம் கொண்ட சிவன், பூங்காவனத் தாயின்

இருப்பிடமான மலையனூருக்கு வந்து இரவில் தங்கியதால்அந்த இரவே மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுவதாக கூறுவர்.

தனிச்சிறப்பு :

மகாசிவராத்திரிக்கு மறுநாள் பூரண அமாவாசை தினம் இந்நாளில் அனைத்து வித மூலசக்திகளான 63 சக்திகளும், 9 நவசக்திகளாகி, 7 சப்த சக்திகளாகி, 5 பஞ்ச சக்திகளாக திகழ்ந்து, முப்பெரும் தேவியராக விளங்கி ஒன்று திரண்டு எழுந்த மூல முழு சக்தியாக விளங்கிடும் நாள். சிற்சக்தி என்ற ஒரே சக்தியாக, ஒம் சக்தி என்ற ஓங்கார சக்தியாக, ஆவிகளுக்கும் ஆன்மாக்களுக்கும் பொதுவாக குறையிடுவதாக, உணவு வழங்குவதாக கருதப்படுகிறது. ஆகையால் ஓம் சக்தி என்ற சிற்சக்தியான அங்காளியால் இறைக்கப்படும் உணவை சாப்பிட ஆவிகளும், ஆன்மாக்களும் கீழே இறங்கும்போது அங்காளியானவள் ஆவி ஆன்மாக்களைக் தலைகளாக கருதி அவற்றை ஒவ்வொன்றையும் எலுமிச்சைப்பழத்தை ஊசியில் கோர்த்து மாலையாய் அணிவிப்பதை போன்ற தலைகளால் மாலையாக கோர்த்து தலை மாலைச் சூடிய ஆங்காரி

அங்காளியாக விளங்குகிறாள்.

மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிடித்திருந்த பிரம்மஹத்தி நீங்கிய இடமாக கருதப்படுவதால் அமாவாசை தோறும் தொடர்ந்து மூன்று முறை வருகை தந்தால் அவர்களை பிடித்துள்ள பிணிகள், தோஷங்கள், வைப்பு ஏவல், பில்லி, சூன்யம், காட்டேரி, சேட்டை, எதுவாயினும் அம்மன் திருவருளால் தானாக விலகுகிறது.

குலதெய்வ வழிபாடு செய்ய மக்கள் வெள்ளி (ம) ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திருக்கோயிலுக்கு வந்து மொட்டையடித்து, காதணி விழா செய்வது, பொங்கல் வைத்து பூஜை செய்வது, அபிஷேக ஆராதனை செய்வது, கஞ்சுலி, கபால வேஷம், வேப்பஞ்சீலை, மஞ்சள் ஆடை அணிந்து வந்து வேண்டுதல் செய்வது இத்திருக்கோயிலின் சிறப்புகளாகும். இத்திருக்கோயிலுக்கு ஒரு முறை வருகை தந்து தங்கள் எண்ணத்தை அம்மனிடம் வேண்டி கொண்டால் வேண்டியதுவேண்டியபடி நடக்கிறது.

 

இத்திருக்கோயில் இளங்கோயில் வகையை சேர்ந்தது. முற்கால சோழர்களால் மூலவர் அம்மன் திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது. சுயம்பு புற்று அம்மன் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. இத்தலத்தின் பெருமை குறித்து மதங்க முனிவர், சன்னு முனிவரால் பாடப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்

அமாவாசைதோறும் நள்ளிரவு 12 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. மாசி மாதம் மகாசிவராத்திரியன்று தொடங்கி 7ம் நாள் தேரோட்டத்துடன் கூடிய பிரம்மோற்சவமும் நடக்கிறது.

அன்னதானத்திட்டம்

இத்திருக்கோவிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின்

அன்னதானத்திட்டத்தின்படி தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறுது. வாரந்தோறும் சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிக வகுப்பு நடைபெற்று வருகிறது.

திருக்கோயில் தரிசன நேரம்

காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், அமாவாசை தினங்களில் நாள் முழுவதும் திருக்கோயில் திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி

திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செஞ்சியிலிருந்து பேருந்துகள் உள்ளன. சென்னையிலிருந்து நேரடி பேருந்து வசதியும் உண்டு. அவலூர்பேட்டை மற்றும் வளத்தியிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

தங்கும் வசதி

திருக்கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகள் மற்றும் மேல்மலையனூரில் தனியார் தங்கும் விடுதிகளும் உள்ளன.

தொடர்பு முகவரி

உதவி ஆணையர் ,

செயல் அலுவலர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்,

மேல்மலையனூர், செஞ்சிவட்டம், விழுப்புரம் மாவட்டம்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *