இறைவி : கொப்புடையநாயகி அம்மன்

தலவிருட்சம் : வில்வமரம்

ஆகமம் : காரண

தீர்த்தம் : தெப்பக்குளம் (கல்லுக்கட்டி ஊரணி)

அமைவிடம்:

சிவகங்கையிலிருந்து வடகிழக்கில் 45 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இத்தலத்தில் காரைக்குடி நகர மத்தியில் அருள்மிகு கொப்புடையநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. காரைக்குடி இருப்புப்பாதை சந்திப்பினின்றும் 3 கி.மீதூரத்தில் கோயில் இருக்கிறது.

வரலாறு :

கருவறையினுள் கிழக்கு நோக்கி அன்னை அருள்மிகு கொப்புடையநாயகி எழுந்தருளியிருக்கிறாள். நின்ற கோலத்தில் தனது குழந்தைகளான உயிர்க்குல முழுவதற்கும் அருள்பாலிக்கும் விதமாக நான்கு கரங்களுடன் சுவாலைக் கிரீடத்துடன் காட்சி தருகிறாள். வலது முன்கை அபயமளிக்கும் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. வலது மேற்கை சூலத்தை ஏந்திய வண்ணமும் இடது மேற்கை பாசமேந்தியும் இடது கீழ்கை கபாலத்தை தாங்கியும் விளங்குகிறது. இத்திருவுருவம் பஞ்சலோக உற்சவத்திருமேனியாகும். இதுவே மூலவராகவும் விளங்குகிறது, கொப்பு என்றால் கிளை என்றும் பொருள் உண்டு. இத்தலத்தில் முதன்மை விக்ரகமாக ஏனைய திருக்கோயில்களில் இருப்பதுபோல் சிலா விக்ரகமாக அமையாது, உற்சவத்திருமேனியாகிய விக்ரகமே முதன்மை விக்ரகமாக (அதாவது மூலவிக்ரகமாக) விளங்கி வருதல் அம்மன் திருக்கோயில்களிலேயே மிகவும் புதுமையானதாகும், கிளையாகிய உற்சவத்திருமேனியை கொப்பு என்ற பொருளில் பார்த்தோமானால் கொப்புடையாள் என்ற திருப்பெயர் எத்துணை பொருத்தமாக நம்முன்னோர்களால் வழங்கப்பட்டுள்ளது என்பது நன்கு விளங்கும்.

இதுமட்டுமல்லாமல் சிற்பநூல்களில் பத்திரகாளி அல்லது மகிஷாசுரமர்த்தினிக்கு நான்கு கரங்களுடன் கூடிய அமைப்பு எங்கும் சொல்லப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இந்த வகையிலும் அன்னை கொப்புடையாள் மிகவும் முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாகவும், பின்னைப் புதுமைகளுக்கெல்லாம் புதுமையாகவும் மீண்டும் விளங்கிவருவதை உணர்ந்து மகிழலாம்.

மேற் கண்ட வாறான அன்னை யின் உற்சவ மூர்த்தி கருவறையினுள் பீடத்தின் மேல் உள்ளது. பீடத்தில் ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அஃது திருக்கோயில் ஏற்பட்ட காலத்தில் அப்போதிருந்த சங்கராச்சாரிய ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டதாகவும் கூறுவர்.

திருக்கோயில் முக்கியத்துவம்:

இத்திருக்ககோயில் இருந்தருளும் அம்மையே எழுந்தருளும் அம்மையாக அருள்பாலித்து வரும் சிறப்பு மிக்க பிராத்தனை தலமாகும்.

சித்திரை செவ்வாய் பெருந்திருவிழாவில் திருமணத்தடை நீக்கவும், குழந்தைபேறு வேண்டி கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவது இத்திருத்தலத்தின் தனி சிறப்பாகும்.

கொப்புடைய நாயகியம்மன் செட்டி நாட்டு பகுதியான காரைக்குடியின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறது.

திருக்கோயில் திறந்திருக்கும் நேரம்:

தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி நடை திறந்திருக்கும் 12.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடை சாத்தப்படும், 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திருக்கோயில் திறந்திருக்கும்.

கால பூஜைகள்:

தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.

கால சந்தி காலை 7.30 மணிக்கு.

உச்சிகாலம் நண்பகல் 12.00 மணிக்கு (உச்சிகால பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 4.30 மணிக்கு நடைதிறக்கப்படும்)

சாயரட்சை மாலை 5.00 மணிக்கு

அர்த்தசாமம் இரவு 8.00 மணிக்கு (வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.00 மணி)

முக்கியத் திருவிழாக்கள்:

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களிலேயே மிகவும் சிறப்பாக நடைபெறும் திருவிழா சித்திரைச் செவ்வாய்ப் பெருந்திருவிழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கடைசிச் செவ்வாய்க் கிழமை தொடங்கி வைகாசி முதல் வாரம் முடிய 10 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய்க் கிழமைகள் வந்தால் அதில் இரண்டாவது செவ்வாயிலும், ஐந்து செவ்வாய்க் கிழமைகள் வந் தால் அ தி ல் மூன்றா வ து  ெச வ் வா யி லு ம் அன்னை கொப்புடையவளுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். காலை விசேட பூசை அம்மனுக்கு பூ அலங்காரம் செய்து சோபன மண்டபத்தில் எழுந்தருள வைத்து பக்தர்கள் எல்லோரும் அம்மனுக்கு திரள் திரளாக பூக்கொண்டு வந்து சொரிவார்கள். காரைக்குடியைச் சுற்றிலுமுள்ள அனைத்து மக்களாலும் இவ்விழா கலைநிகழ்ச்சிகளுடன் விரும்பிக் கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் இவ்விழா நடைபெறுகிறது. 10வது நாளில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் வெளி மண்டபத்தில் வைத்து செய்யப்பட்டு மரக்குதிரையில் புறப்பாடாகி மகர்நோன்புப் பொட்டலை அடையும். அங்கு கோவிலூர், திருநெல்லை, நகர சிவன்கோயில், சுந்தரேசுவரபெருமான் கிருஷ்ணமூர்த்தி பெருமாள் மற்றும் கொப்புடைய நாயகி அம்மன் ஆகியசுவாமிகள் அம்பு போட்டு ஒன்றாகத்தீபாராதனை நடக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

திருக்கோயிலுக்குச் செல்லும் வழித்தடம்:

திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் சாலையில் 100 கி.மீ தூரத்திலும், மதுரையிலிருந்து காரைக்குடி பேருந்து நிலையம் 85 கி.மீ தூரத்திலும், சிவகங்கையிலிருந்து 45 கி.மீ தூரத்திலும், இராமநாதபுரத்திலிருந்து 100 கி.மீ தூரத்திலும் காரைக்குடியில் உள்ள இத்தலத்திற்கு வரலாம்.

பேரூந்து மற்றும் இரயில் நிலையம் உள்ள தூரம்:

இத்திருக்கோயிலிருந்து இரயில் நிலையத்திற்கு 3 கி.மீ தூரத்திலும், காரைக்குடி பேரூந்து நிலையம் 2 கி.மீ தூரத்திலும் உள்ளது.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *