பெயர்: கேதார்நாத் கோயில்
மூலவர்: கேதாரீஸ்வரர் (சிவன்)
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருநாவுக்கரசர்
வரலாறு
நிறுவிய நாள்: கி.பி. எட்டாம் நூற்றாண்டு
அமைத்தவர்: ஆதி சங்கரர்

கேதார்நாத் கோயில் இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத்தலங்க தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,[1] கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியின் உகிமத் மடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.கேதார்நாத் கோயில், பஞ்ச கேதார தலங்களுல் ஒன்றாகும்.

இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இது திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் ஆதி சங்கரரின் வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்கு இமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

கேதார்நாத், 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் பாதிப்படைந்தது. கோயிலைச் சுற்றி இருக்கும் நகர்ப்புரங்கள் பெரும் சேதமடைந்தாலும், கோயில் வளாகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

கோயிலின் அமைவிடம்

இக்கோயில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது.[4] இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்தபோது கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இன்றைய கோயில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[2] இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.[2]
புராணம்
இக்கட்டுரை சைவ சமயம் தொடரின் ஒரு பகுதியாகும்.
சிவநெறி

சைவ சமயம்

மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர். ஹரித்வார் வழியாக இமயத்தை அடைந்தபோது தொலைவில் சிவபெருமானை கண்டனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

சிவபெருமானைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர்.

பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது.அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.

காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது. கோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்படுகின்றன.

நர-நாராயணன்கள் பத்ரிகா என்னும் கிராமத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். அவர்களுக்குக் காட்சியளித்த சிவபெருமானிடம், உலக மக்கள் நன்மைக்காக சிவபெருமான் எப்போதும் இங்கு இருந்து அருள வேண்டும் என்று வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இமயத்தில் கேதார் என்னும் இடத்தில் ஜோதிர்லிங்க வடிவத்தில் திகழ்கிறார். அவர் கேதாரேஷ்வரர் என்று போற்றப்படுகிறார்.
கோயிலுக்குள்
1880களில் எடுக்கப்பட்ட கேதார்நாத் கோயிலின் புகைப்படம்

கோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது.இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் உள்ள, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
தலைமை அர்ச்சகர்

கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[9] ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். குளிர்காலத்தில் கோயில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது.
கோயில் நிர்வாகம்

கேதார்நாத் கோயில், உத்ராஞ்சல் (தற்போது உத்தராகண்ட்) மாநில அரசாங்கத்தின் ஶீ பத்ரிநாத் மற்றும் ஶீ கேதார்நாத் கோயில் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி, மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஒரு குழு இவ்விரு கோயில்களையும் நிர்வகிக்கும். கூடுதல் குழு உறுப்பினர்களையும் மற்றும் ஒரு துணை தலைவரையும் சேர்க்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டது.[10] மொத்தம் பதினேழு உறுப்பினர்களை கொண்டது இக்குழு; அதில் மூவர் மாநில சட்டப் பேரவை மூலமாகவும், கார்வா, தேரி, சமோலி மற்றும் உத்தரகாசி ஆகிய வட்டங்களிலிருந்து தலா ஒருவரும், மாநில அரசால் நேரடியாக பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படுவர்.இக்கோயிலில் தலைமை அர்ச்சகர் (ராவல்) ஒருவரும், மூன்று துணை அர்ச்சகர்களும் (நயப் ராவல், ஆசார்யா/தர்மாதிகாரி மற்றும் வேத்பதி) ஆகியோரும் உள்ளனர். மாநில அரசிடம் இருந்து வரும் உத்தரவுகளை தலைமை செயல் அலுவலர் நிறைவேற்றுவார். அவருக்கு உதவியாக ஒரு துணை தலைமை செயல் அலுவலர், ஒரு செயல் அலுவலர், ஒரு கணக்காயர், ஒரு கோயில் அலுவலர் மற்றும் ஒரு விளம்பர அலுவலர் செயல்படுகின்றனர்.
2013 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு

கேதார்நாத் பள்ளத்தாக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் 2013ஆம் ஆண்டு சூன் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. சூன் 16, 2013 அன்று மாலை 7:30 மணி அளவில் கேதார்நாத் கோயிலுக்கு அருகில் பெரும் சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. அன்று மாலை 8:30 மணி அளவில் மந்தாகினி ஆற்றில் நீரோட்டம் பெருக்கெடுத்து கட்டுக்கடங்காது சோர்பாரி தால் என்னும் இடத்தின் வழியாக ஓடத்தொடங்கியது. மறுநாள் காலை 6:40 மணியளவில் சரஸ்வதி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் பாறைகளையும் அடித்துக் கொண்டு ஓடியது. வெள்ளத்தில் மிதந்து வந்த பெரிய பாறை ஒன்று கேதார்நாத் கோயிலின் பின்புறம் சிக்கிக் கொண்டது. அப்பாறை வெள்ள நீரை கோயிலுக்கு இருப்புறமும் பிரித்துவிட்டது. இதனால் வெள்ளத்தால் கோயிலுக்கு பெரும் சேதம் உண்டாவது தவிர்க்கப்பட்டது. ஆனாலும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். கேதார்நாத்திலுள்ள கடைகள், விடுதிகள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்திய இராணுவத்தால் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படும்வரை பலர் கோயில் வளாகத்தில் தஞ்சமடைந்தனர். கோயிலைச் சுற்றி ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் சரி செய்யப்படும்வரை கோயில் மூடப்படும் என்று உத்தராகண்ட் முதல்வர் அறிவித்தார்.
கேதார்நாத் கோயில் வழிபாட்டிற்கு திறப்பு
கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *