Rating :

இறைவன் : சந்திரமௌலீஸ்வரர்

இறைவி : அமிர்தாம்பிகை, வடிவாம்பிகை

தீர்த்தம் : சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்

தலவிருட்சம் : வில்வம்

ஆகமம் : காமிகம்

அமைவிடம்

திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னுமிடத்தில் இறங்கி தெற்கு நோக்கி 7 கி.மீ. தூரம் சென்றால், திருவக்கரையை அடையலாம். விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாக பாண்டிச்சேரி செல்லும் சாலையில் திருக்கனூரில் இறங்கி வடக்கு நோக்கி 5 கி.மீ சென்றும் திருவக்கரையை அடையலாம்.

தல வரலாறு

திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிவத் தலங்களுள் திருவக் கரையும் ஒன்று . தொண்டை நாட்டிலுள்ள 32 சிவத்தலங்களுள் இது 30வது ஸ்தலமாகும்.

புராண வரலாறு

வக்கிராசூரன் என்னும் அரக்கன் சிவ பெருமானை த ன து க ண் ட த் தி ல் (தொண்டையில்) வைத்து

பூஜை செய்தான். தனது தவ வலிமையால் சாகா வரம்

பெற்றான். தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவர்களை கொடுமை செய்து வந்தான். அவன் செய்கைகளை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் மகாவிஷ்ணுவை அழைத்து வக்கிராசூரனை வதம் செய்யும்படி கூற அவரும் சூரனுடன் போரிட்டு தனது சக்கரத்தை வக்கிராசூரன் மீது பிரயோகம் செய்து அவனை அழித்தார். வக்கிராசூரன் தங்கையான துன்முகியும் தன் அண்ணனைப் போலவே கொடுஞ்செயல் புரிந்து வந்தாள். அரக்கியான அவளை வதம் செய்ய சி வ  ெப ரு ம 1ா ன் பார் வதி யிடம் கூற பார் வதி தே வி யும் துன் முகி ைய வ தம் செய்யச் சென்றாள். ஆனால் அப்போது துன்முகி கருவுற்றிருந்தாள்.

சாஸ்திரமுறைப்படி கர்ப்பிணியையோ அல்லது சிசுவையோ வதம் செய்யக்கூடாது. எனவே பார்வதி தேவி துன்முகியின் வயிற்றை கிழித்து அவள் வயிற்றிலிருந்த சிசுவை தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு அரக்கியான துன்முகியை வதம் செய்தாள். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்கிரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.

வரலாற்று பின்னணி:

இத்திருக்கோயில் ஆதித்ய சோழனால் சுமார் 2000ஆண்டுகளுக்கு முன் செங்கற்களால் கட்டப்பட்டது. முதலாம் பராந்தக சோழனின் மகனான இராஜாதித்த சோழனால் நிதி அளிக்கப்பட்டு அவனுடைய தம்பியான கண்டராதித்த சோழனால் (கி.பி 950-957)திருக்கோபுரம் கட்டுவிக்கப்பட்டு அவரது பெயரிலேயே ‘கண்டராதித்தன் திருக்கோபுரம்’ என்றும் வழங்கப்பட்டது. கண்டராதித்தன் மனைவியான செம்பியன் மாதேவி இத்திருக்கோவிலை கற்றளியாக்கி நிலம், பொன் முதலியவற்றை வழங்கியுள்ளார்.

திருக்கோவில் அமைப்பு:

இத்திருக்கோயில் பெரிய இராஜகோபுரத்துடன் சுமார் 10 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ளது.

இராஜகோபுரம், திருநந்தி, கொ டி ம ர ம் , மூ ல வ ர் முதலானவை ஒரே நேர்கோட்டில் அமையப்பெறாமல் ஒன்றை விட்டு ஒன்று விலகி வக்கிரமாக அமைந்துள்ளதை வேறெங்கும் காண முடியாது.

அம்பாள் திருக்கோயிலை அடுத்திருப்பது தீபலட்சுமியின் திருக்கோயில் ஆகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் ராகுகாலத்தில் திருவிளக்கேற்றி, அம்மனை வழிபட்டு மாங்கல்யம் கட்டிவிட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

காளிக்கோயிலின் எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் ஆத்மலிங்கக் கோயில் அமைந்துள்ளது. வக்ராசூரன் பூஜித்ததால் வக்கிரலிங்கம் என அழைக்கப்படுகிறது இந்த லிங்கம் கோடைக் காலங்களில் குளிர்ச்சியாகவும், மழைக்காலங்களில் முத்து முத்தான நீர்துளிகளுடனும் காணப்படும்

கிளிக்கோபுரத்தை அடுத்து அமைக்கப் பெற்றுள்ள மிகப்பெரிய உள் மண்டபத்தின் கருவறையில் மூல நாதனாக மகேஸ்வரன் மும்முக லிங்கமாக காட்சி அளிக்கிறார். மும்முக லிங்கத்திற்கு கிழக்கே தட்புருட முகமும், வடக்கே வாமதேவ முகமும், தெற்கே அகோர முகமும் அமையப் பெற்றுள்ளது. அதிகாலையில் தட்புருட முகத்தை மஞ்சள் பூசியும், உச்சிக்காலத்தில் வாமதேவ முகத்தை சந்தனம் சாத்தியும், மாலையில் அகோர முகத்தை குங்குமம் அணிவித்தும் பூஜை செய்து வணங்கினால், அகிலத்தையே காக்கிற அந்த அர்த்த நாரீஸ்வரரின் அருள் நமக்கு கிடைக்கும். இதில் தெற்கே அமைந்துள்ள அகோர முகத்தில் பெயருக்கேற்றாற் போல் வாயில் இரு ஒரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன. இக்காட்சியை இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்யும் போது மட்டும்தான் கண்டு களிக்க முடியும்.

மும்முகம் கொண்ட திருமூலநாதனின் வலப்புறம் நடராஜப் பெருமான் சன்னதி அமைந்துள்ளது. இடது காலை தூக்கி, வலது காலை ஊன்றி, ஆடும் சத்தியநாதன் இங்கு மட்டும் இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி “ருத்திரதாண்டவம்” ஆடுகின்றார்.

கருவறையின் வலப்புறத்தில் 16 பட்டை லிங்கம் அமைக்கப்பெற்றுள்ளது. இடப்புறத்தில், வீரபத்திரர் காட்சி தருகிறார்.

கருவறையின் உள் சுற்றில் முதலில் இருமருங்கும் இருப்பது சமயக் குரவர்கள் சிலை, அதனையடுத்து ஆனைமுகனான விநாயகர், பின்னர் சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் அதையடுத்து விஷ்ணுதுர்க்கையும் உள்ளனர். எங்கும் இல்லாத அற்புதமாக விஷ்ணுவும் துர்க்கையும் ஒன்று சேர்ந்து ஒரு கையில் சங்கும் மறுகையில் சக்கரமும் ஏந்தி நின்ற நிலையில் காட்சி தருகின்றனர். அருகில் பல்லவர்கால, குடையுடன் கூடிய விநாயகர் சிலை உள்ளது. மேலும்

இங்குள்ள துர்க்கை எட்டு கைகள் உடைய அஷ்டபுஜ துர்க்கையாக காட்சியளிக்கிறாள்.

இத்திருக்கோயில் கருவறையின் பின்புறம் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானின் வேண்டுகோளுக்கிணங்க வக்கிராசூரனை வதம் செய்துவிட்டு பிரயோகச் சக்கரத்துடனும், சங்கும் விளங்க, அபய அஸ்தத்துடன் ஆறடி உயர திருக்கோலத்தில் அற்புதமாக எழுந்தருளியுள்ளார். இக்கோயில் கோச் செங்கட் சோழனால் செங்கல்லால் கட்டப்பட்டமையை, இங்குள்ள கல்வெட்டால் அறிய முடிகிறது. (க.வெ. 205, 1904).

பெருமாள் சந்நிதியின் உள் புறத்திலேயே, இடது பக்கத்தில் நந்த கோபாலனின் திருவுருவச்சிலை உள்ளது. தனது ராமாவதாரமும், கிருஷ்ணாவதாரமும் ஒன்று என, உலகுக்குக் காட்டும் விதத்தில் ராமகிருஷ்ணனாக தனது மனைவி பாமா, ருக்மணியுடன் இணைந்து கையில் வில்லும், அம்புமாக காட்சி தரும் திருக்கோலம் கண்கொள்ளாக் காட்சியாகும். கோயிலின் எதிரில் கருடாழ்வார் எழுந்தருளியிருக்கிறார்.

பெருமாள் கோயிலின் பின்புறம் கிழக்கு நோக்கி “சஹஸ்ரலிங்கம்” கோயில் அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் 1008 லிங்கங்கள் அமைக்கப்பெற்றுள்ளது. நவகிரகங்களில் வழக்கமாக சனீஸ்வரனுக்கு காகம் வலப்புறமாக இருப்பதற்கு பதிலாக இங்கு இடப்புறமாக அமைந்துள்ளது.

 

கருவறைக்கு தென் திசையில் குண்டலினி மாமுனிவர் என்ற சித்தர் ஜீவசமாதி ஆகியுள்ளார். அவர் ஜீவசமாதி நிலையை அடைந்ததும் லிங்கம் அமைக்கப்பெற்ற நிலையில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.

 

 

தனிச்சிறப்பு

இராஜகோபுரத்தின் உட்புறம் மேற்கூரையில் ஒன்பது கட்டங்களின் நடுவே அழகிய தாமரை மலர் அமைக்கப் பெற்றுள்ளது. இம்மலரைச் சுற்றிலும் திசைக் காவலர்கள் (அஷ்டதிக்குப் பாலகர்கள்) காட்சியளிக்கின்றனர். கோபுரத்தின் அதிஷ்டானம் (அடிப்படை) கருங்கற்களாலும், சுவர் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இராஜகோபுரத்தை அடுத்த கோயிலின் உட்பகுதியில் இடப்பக்கமாக அருள்மிகு வக்கிர காளியம்மன் சன்னதி உள்ளது. பொதுவாக காளிக்கோயில் ஊரின் எல்லையில் இருக்கும். ஆனால் இவ்வூரின் நடுவில் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வலது காலை சற்றே தூக்கி மடித்து அமர்ந்துள்ள பீடத்தில் ஊன்றியபடியும், இடது காலை தரையில் ஊன்றியபடியும் உடலை சற்று வலப்புறம் திருப்பிய நிலையில் அமர்ந்துள்ள காட்சி வேறெங்கும் காணக்கிடைக்காதது. அன்னையின் இடது பாதத்தின் கீழே ஆதி சங்கரரின் பூரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர் கோயிலின் உள்ளே சப்த மாதர்கள் உள்ளனர். இவர்களில் சாமுண்டிக்கு பதிலாக அன்னை பராசக்தியே காளியாக உரு வெடுத்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இத்திருவுருவங்கள் பிற்காலப் பல்லவர்களின் கலைத் திறனைப் பிரதிபலிக்கின்றன. காளி சன்னதி கருவறையின் வலது புறம் யோகேஸ்வர லிங்கமும் இடதுபுறம் வலம்புரி கணபதியும் உள்ளனர். இவற்றில் வலம்புரி கணபதி அபூர்வமான கணபதியாகும். காளிகோயிலின் வெளிப்புறத்தில் பக்கத்திற்கு இரண்டாக நான்கு துவார பாலிகைகளின் சிலை உள்ளது. இந்த துவார பாலிகைகளையுடைய வரலாறு நமக்கு காளியின் கருணையை எடுத்துக்காட்டுகிறது.

முதலாம் இராஜ இராஜசோழன் காலத்திலிருந்து (கி.பி.1430ல்) இருந்து செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும், குறுநில மன்னர்களும், அரசு அதிகாரிகளும் செய்வித்த திருப்பணிகளையும், கோயிலுக்கு அளித்த நிமந்தங்களையும், 43 கல்வெட்டுகள் விரிவாக எடுத்துச் சொல்கின்றன.

கன்னிப் பெண்களுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வந்தால் இத்திருக்கோயிலுக்கு வந்து கருவறையின் உள்சுற்றில் இருக்கின்ற கருங்கல் சுவருக்கு மஞ்சள் பூசி பூஜைகள் செய்த “பஞ்ச கன்னிதோஷம்” என்ற சாந்தியை செய்து

கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

வக்கிர கிரகங்களால் வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிரகாளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி முதலியோரை தரிசித்து, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோயிலினை வலம் வந்தால், வக்கிர கிரகங்களின் தொல்லைகளும், துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயனடைவர்.

இக்கோயிலில் உள்ளதுர்க்கையம்மனை தரிசித்து செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இராகு கால நேரத்தில் அர்ச்சனை செய்து வந்தால் நிறைந்த பலனுண்டு. மேலும், நினைத்த காரியம் கைகூட வேண்டுமென்போர், உடல் நலமற்றோர், மற்றும் மனசாந்தி அற்றோர் யாவரும், பெளர்ணமி தினத்தன்று வக்கிரகாளியம்மனை தொடர்ந்து இடைவிடாது மூன்று மாத பெளர்ணமி நாட்களிலும் தரிசித்து வந்தால், எண்ணிய காரியம் கைகூடும். பெளர்ணமி தினத்தில் நள்ளிரவு 12 மணி பூஜையில் காளியம்மனை தரிசித்தால் காளியம்மனின் சாந்த சொரூபத்தை காணுவதுடன் எல்லாம் வல்ல இறையருள் பெற்று பயனடையலாம்.

திருஞானசம்பந்தர் தனது திருப்பதிகத்தின் மூன்றாம் செய்யுளில்

“சந்திரசேகரனே அருளாயென்று தண் விசும்பில்

இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச

அந்தர மூவெயிலும் அனலாய்விழ ஒரம்பினால்

மந்திர மேருவில்லா வளைத்தான்இடம் வக்கரையே”

என்று பாடியுள்ளார்.

திருநாவுக்கரசர் தனது திருப்பதிகத்தின் இரண்டாம் செய்யுளில்

“நக்க ரையனை நாள்தொறும் நன்னெஞ்சே

வக்க ரைஉறை வாணைவ ணங்குநீ

அக்க ரையோ டவரை யார்த்தவன்

கொக்க ரையுடை யான்குட முக்கிலே”

என்று பாடியுள்ளார்.

மேலும் சேக்கிழார் அருணகிரிநாதர், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் இத்தல இறைவனை சிறப்பித்துப் பாடியுள்ளனர்.

திருவிழாக்கள்

இத்திருக்கோயிலில் பெளர்ணமி தோறும் இரவு 12 மணிக்கு ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மற்றும் சித்ரா பெளர்ணமி சுவாமி வீதியுலா, கார்த்திகை தீபம், தைப்பூசம், காணும்பொங்கல், சித்திரை-1, தெப்பல் உற்சவம், சிவராத்திரி, ஆடிக்கிருத்திகை ஆகிய விழாக்களும் நடைபெறுகின்றன.

அன்னதானத்திட்டம் இத்திருக்கோவிலில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அன்னதானத்திட்டத்தின்படி தினசரி 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் சிறுமியருக்கு ஆன்மிக வகுப்பு நடைபெற்று வருகிறது.

திருக்கோயில் தரிசன நேரம்

காலை 5.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும் பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், பெளர்ணமி அன்று நாள் முழுவதும் திருக்கோயில் திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி

திண்டிவனம், பாண்டிச்சேரி, விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திருக்கனூரிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது. தங்கும் வசதி திண்டிவனம், பாண்டிச்சேரி, விழுப்புரம் ஆகிய ஊர்களில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

தொடர்பு முகவரி

செயல் அலுவலர்

அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை,

வானூர் வட்டம்

Share:

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *