அருள்மிகு திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம் வடலூர்
திருஅருட்பிரகாச வள்ளலார் 1872ல் தோற்றுவித்த சத்திய ஞானசபை
தெய்வநிலையம் அமைவிடம்
கடலூர் மாவட்டம், கடலூரிலிருந்து தென்மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும் சிதம்பரத்திலிருந்து மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும் விருத்தாசலத்திலிருந்து கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும் வள்ளலார் தெய்வநிலையம் அமைந்துள்ளது. வடலூர் புகைவண்டிநிலையத்திலிருந்து தெற்கே 1கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தெய்வநிலையத்தைத் தோற்றுவித்தவர்
 
திருவருட்பிரகாசவள்ளலார் (எ) சிதம்பரம் இராமலிங்க
அடிகள்
 
திருவருட்பிரகாசவள்ளலார் வரலாறு
 
இயற்பெயர் : இராமலிங்கம்
சிறப்புப்பெயர் : திருவருட்பிரகாசவள்ளலார்
பிறப்பு : 05.10.1823 சுபானு வருடம்
புரட்டாசிமாதம் 21ம்நாள் ஞாயிற்றுக்கிழமை
பிறந்த ஊர் : மருதூர். சிதம்பரம் செல்லும் வழியில்
அமைந்தது.
 
பெற்றோர் : இராமையாப்பிள்ளை-சின்னம்மையார் உடன்பிறந்தோர் சபாபதி, பரசுராமன்,சுந்தராம்பாள், உண்ணாமுலை.
 
வாழ்ந்த இடங்கள்.
சென்னை – 1825 – 1858
கருங்குழி – 1858 – 1867
வடலூர் – 1867 – 1870
மேட்டுக்குப்பம் – 1870 – 1874
 
இறவாப் பெருநிலை:
30.01.1874 பூரீமுக வருடம் தைமாதம் 19ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு12.00 மணி.
 
வள்ளல் பெருமானாரின் சன்மார்க்க நெறிகள்
 
1. புலால் உண்ணலாகாது
2. சிறுதெய்வவழிபாடுகூடாது
3. கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்ஜோதி.
4. தெய்வங்கள் பெயரில் உயிர்ப்பலி கூடாது
5. சாதி, சமய, மத வேறுபாடுகள் கூடாது
6. எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
7. ஏழைகளின் பசி தவிர்த்தலே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
8. இறந்தவரைச் எரிக்க கூடாது. புதைக்க வேண்டும்.
9. எக்காரியத்திலும் பொது நோக்கம் வேண்டும்
10. எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க.
 
05.10.1823ல் திருஅருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லம் மருதூர்.
வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம்சிதம்பரம் வட்டத்தில் வடலூருக்குத் தென்கிழக்கில் 12
கி.மீ தொலைவில் நெல் வயல்கள் சூழ்ந்த பசுமை நிறைந்த கிராமமாக மருதூர் அமைந்துள்ளது.
அரும்பசியோடு அன்னம் வேண்டி அடியவர் வடிவில் இல்லத்தை நாடி வந்த இறைவனுக்கு சின்னம்மையார் அன்னம் வழங்கினார். பசியாறி அகம் மகிழ்ந்த அடியவரின் அருளாசியின்படி இராமையாவுக்கும் சின்னம்மைக்கும் அருந்தவப் புதல்வராக நமது வள்ளற்பெருமானார் 05.10.1823 சுபானு ஆண்டு புரட்டாசி 21 ஞாயிறு மாலை 5.54 மணியளவில் அவதரித்தார்.
வள்ளற் பெருமானார் அவதரித்த இல்லம் திருப்பணி செய்யப்பெற்று அழகுற திகழ்கின்றது. இங்கு தினசரி காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை திருவருட்பா பாடல்களைப் பாடி வழிபாடு செய்யப்பெறுகின்றது.
 
வள்ளற் பெருமானார் தண்ணிரால் விளக்கு எரித்த நற்கருங்குழி இல்லம்
திருஅருட்பிரகாச வள்ளலார் வாழ்ந்த கருங்குழி இல்லம்.
தில்லையில் வள்ளற்பெருமானாரைக் காண நேர்ந்த கருங்குழியைச் சேர்ந்த மணியக்காரர் வேங்கடரெட்டியார் என்பவர் தம்மூர்க்கு வருமாறு அழைத்தார். பெருமானாரும் கருங்குழிக்கு எழுந்தருளினார். வேங்கடரெட்டியார், பெருமானாரை அன்போடு வரவேற்று உபசரித்துக் கருங்குழியில் தம் இல்லத்திலேயே தங்கியருள வேண்டினார். ரெட்டியாரின் உண்மை அன்பை உணர்ந்த பெருமானார் அவரது விருப்பத்திற்கிணங்கக் கருங்குழியில் அவரில்லத்திலேயே தங்கினார்கள். 1858ல் கருங்குழிக்கு வந்தது முதல் 1867ல் தருமச்சாலையை வடலூரில் ஏற்படுத்தும் வரை கருங் குழியே பெருமானாரின் உறைவிடமாயிற்று. இவ்வில்லத்தில் இருந்தபோது ஒரு நாள் இரவு பெருமானார் எழுதிக் கொண்டிருக்கும் போது விளக்கு மங்கவே, தண்ணிர் சொம்பை எடுத்து விளக்கில் ஊற்றினார்கள். விளக்கும் இரவு முழுவதும் நன்கு எரிந்தது. இக்காலத்தில் அடிக்கடி
பெருமானார் சிதம்பரம் சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டார்கள். திரு முது குன்றம், திரு வதிகை, திருவண்ணாமலை முதலிய தலங்களுக்குச் சென்றும் வழிபட்டார்கள். கருங்குழியில் வசித்த காலத்தில் சிதம்பர வழிபாட்டு காலம் எனலாம். நான்காம் திருமுறையும் ஆறாம் திருமுறையின் முன்பகுதிப் பதிகங்களும் இக்காலத்தில் பாடப்பெற்றவை.
வடலூர் சத்தியதருமச்சாலை
 
திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய தருமச்சாலை
பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ம் தேதி (23.05.1867) வியாழக்கிழமை தருமச்சாலைத் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னரே கட்டி முடிக்கப் பெற்றிருந்த தற்காலிக மண் கட்டிடத்தில் அற்றார் அழி பசி தீர்க்கும் ஜீவகாருண்ய ஒழுக்கப் பேரறம் தொடங்கப் பெற்றது. நிலையான செங்கற் கட்டிடங்கள் கட்டுதற்கு அடிப்படை நாட்டப்பெற்றது. கிணறு முதலியன தோண்டும் பணிகளும் தொடங்கப்பட்டன. நிலையான (நிரந்தரமான) செங்கற் கட்டிடங்களுக்கு அடிப்படை அஸ்திவாரம்) இடுதல் ஒரு புறமும் முன்னரே கட்டி முடிக்கப் பெற்றிருந்த தற்காலிக சிறு கூரைக் கட்டிடத்தில் அன்னமளிக்கத் தொடங்குதல் பிறிதொரு புறமும் நிகழ, இங்ங்ணம் கால்கோள் விழாவும் திறப்பு விழாவும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ஒருங்கே
கொண்டாடப் பட்டது. கால்கோள் விழாவும் திறப்பு விழாவும் ஒருங்கே கொண்டாடப்பட்ட இஃது உலக வரலாற்றிலேயே முதல்
நிகழ்ச்சியாகும். அதற்குப் பின்னும் நிகழ்ந்ததில்லை. பெருமானார் அருளியலோடு உலகியலிலும் வல்லவர்.
23.05.1867 ல் வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றி இன்று வரை தொடர்ந்து எரியும் அணையா அடுப்பு
 
வடலூர் சத்திய ஞானசபை –
இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவிற் கண்ட பெருமானார் அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் (1872ல்) சத்திய ஞானசபையை நிறுவினார்கள். உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும் சாதி, மதம், இனம், மொழி தேசம் முதலிய எந்தவித வேறுபாடுகளும் இல்லாத நிலையில், அனைவரும் பிரார்த்தனை செய்யும் முறையில் சத்திய ஞானசபையை பெருமானார் அமைத்தார்கள்.
உத்தரஞான சிதம்பரமாகிய வடலூரில் சத்திய தருமச்சாலைக்கு அருகில் சத்தியஞானசபை அமைந்துள்ளது. 1871 பிரஜோற்பத்தி ஆண்டு ஆணித் திங்களில் சபை கட்டத் தொடங்கப் பெற்றது. சபை எண்கோண வடிவானது. தெற்கு நோக்கியது. சபையின் முன் மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும் மேற்புறம் சிற்சபையும் உள்ளன. கிழக்கு வாயிலையுடைய சிற்சபை, தெற்கு நோக்கிய வாயிலையுடைய ஞானசபை, மேற்கு நோக்கிய
வாயிலையுடைய பொற்சபை ஆகிய மூன்றும் ஆய்த எழுத்தைப் போன்று அமைந்துள்ளன. எண்கோண வடிவான ஞானசபைக்குள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும் ஒன்றனுள் ஒன்றாக உள்ளன. நாற்கால் மண்டபத்தின் நடுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். அவ்வருட்பெருஞ்ஜோதியை மறைத்துக் கொண்டு ஏழு வெவ்வேறு நிறத் திரைகள் தொங்குகின்றன. இத் திரைகள் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பின்வருமாறு கூறப்படுகின்றன.
 
கரைவின் மாமாயைக் கரும்பெருந்திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பேருறுநீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர்மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பச்சைத்திரையாற் பரவெளி அதனை
அச்சுறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
செம்மைத்திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி பொன்மைத்திரையாற்பொருளுறுவெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெண்மைத்திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
கலப்புத் திரையாற்கருதனுபவங்களை
அலப்புறமறைக்கும் அருட்பெருஞ்ஜோதி.
– அருட்பெருஞ்ஜோதி அகவல் 813-826
 
பெருமானார் சத்தியஞானசபையை இயற்கை விளக்கம் என்பார். அகத்தே காணற்குரிய அனுபவத்தைப் புறத்தே பாவனையாகக் காட்டுவதே சத்திய ஞானசபை. திரைகளெல்லாம் தத்துவப் படலங்களே, மாயா திரைகளே. நம்மிடத்திலுள்ள அஞ்ஞானமாகிய திரைகள் நீங்கப் பெற்றால் ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கலாம். அகத்தே தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி அனுபவத்தையே புறத்தில் சபையாகக் காட்டினார் பெருமானார்.
 
சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியைநான்பெற்றுக் கொண்டனன்
6-ம் திருமுறை2173
திருந்தும்என் உள்ளத்திருக்கோயில் ஞான
சித்திபுரம்எனச் சத்தியம் கண்டேன்
6-ம் திருமுறை533
என்னும் திருவாக்குகளைக் காண்க.
 
சபையில் முதல் தைப்பூச விழா 25.01.1872
ஆணித் திங்களிற் கட்டத் தொடங்கப் பெற்ற சபைக் கட்டிடம் தைத் திங்களிற் கட்டி முடிக்கப் பெற்றது. பிரஜோற்பத்தி தை 13 வியாழக்கிழமை (25.01.1872) பூச நாளில் முதன் முதலாகச் சபையில் வழிபாடு தொடங்கப் பெற்று அனைவரும் அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர். அருட்பெருஞ் ஜோதியாகிய அகண்டத்தின் ஒளி ஆறடி ஒன்பதங்குல உயரமும் நாலடி இரண்டங்குல அகலமும் உள்ள கண்ணாடியில் பேரொளியாகப் பிரதிபலிப்பதே சபையிற்காணும் அருட்பெருஞ்ஜோதி தரிசனமாம். அக்கண்ணாடியைச் சித்திவளாகத்தில் ஒரு மண்டலம் (48 நாள் ) வழிபாட்டில் வைத்திருந்து பின்பு சபையில் நிறுவச் செய்தனர் என காரணபட்டு கந்தசாமி (ச.மு.க) கூறுவர். நம் ஆன்மாவை ஏழு சக்திகள் மறைத்துக்கொண்டு இருக்கிறது. அவற்றை விலக்கினால் இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருவான் என்பதே இதன் தத்துவம். 1872- ஆம் ஆண்டு முதலில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது
 
மாதப்பூசம்
 
பிரதி மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று இரவு எட்டு
மணிக்கு ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்படும்.
 
தை பூசப்பெருவிழா
 
ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று மட்டும் எழுதிரைகளை விலக்கி ஆறுகாலம் ஜோதி தரிசனம் நடைபெறும்.
 
சித்திவளாகத்திருமாளிகை மேட்டுக்குப்பம்:-
 
கடலூர் மாவட்டம், வடலூர்க்குத் தெற்கே 5 கி.மீ
தொலைவில் மேட்டுக்குப்பம் என்கின்ற கிராமம் அமைந்துள்ளது.
இங்கு வைணவ ஆசாரியார்கள் தங்கும் திருமாளிகை ஒன்றும்
இருந்தது. திருமாளிகையில் பல காலமாக வைணவ ஆசாரியார்கள் வராததால் திருமாளிகை பயனின்றிஇருந்தது.
திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருஅறை.
திருமாளிகையை உறைவிடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்க வேண்டுமென மேட்டுக்குப்பம் கிராமவாசிகள் பெருமானாரை மிகவும் பணிவன்போடு வேண்டினர். அவர்களது அன்பான வேண்டுகோளுக்கு இணங்க அத் திருமாளிகைக்குச் சித்திவளாகத் திருமாளிகை என்று பெயரிட்டு அதில் பெருமானார் எழுந்தருளினார்கள்.
சித்திவளாகம் என்பது பெருமானார் இட்ட பெயர். இந்தப் பெயர் அருமையும், ஆழ்ந்த பொருளும் உடையது. சித்தி என்பது பேரின்ப வாழ்வு. வளாகம்-இடம். சித்திவளாகம்- பிறப்பும் இறப்பும் இல்லாமல் எப்போதும் தடைபடாத இயற்கை பேரின்பத்தை வழங்குகின்ற மகோன்னத இடம்.
சத்திய ஞானதீப வழிபாட்டு விதி 1873 
பெருமானார் பூரீமுக வருடம் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் தினத்தன்று உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து, “இதைத் தடைபடாது
ஆராதியுங்கள், இந்தக் கதவை சாத்திவிடப் போகின்றோம். இனி கொஞ்ச காலம் எல்லோரும், ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல், நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய28 பாசுரங்களடங்கிய பாடலிற் கண்டபடி, தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நானிப்போது இந்த உடம்பிலிருக்கின்றேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன்’ என்று திருவாய்மலர்ந்தருளினார்கள்.
 
சித்திவளாக திருமாளிகையில் வள்ளற்பெருமானார் பூரீமுகதை 19 (30.01.1874) வெள்ளிக்கிழமை அன்று திருஅறையில் சென்று திருக் காப்பிட்டுக் கொண்டு அருட்பெருஞ் ஜோதியானார்கள். ஆண்டு தோறும் தைப்பூசம் ஜோதி தரிசனத்திற்கு மூன்றாம்நாள் திருஅறை தரிசனம் நடைபெறும்.
 
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”
 
   -என்பதே வள்ளலார் அருளியமகாமந்திரமாகும்.
 
வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லம், தண்ணிரால்
திருவிளக்கு எரித்து திருவருட்பா அருளிய கருங்குழி இல்லம், வடலூர் சத்திய தருமச்சாலை, சத்திய ஞானசபை, மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகை, ஆகிய இடங்களைத் தரிசித்து அருள் இன்பம் பெறலாம்.
 
தங்கும் வசதி10 அறைகள் கொண்ட பக்தர்கள் தங்கும் விடுதிஉள்ளது.
அலுவலக முகவரி
செயல் அலுவலர்,
திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையம்,
பார்வதிபுரம், வடலூர்-607303

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *