இறைவன் : அரசலிஸ்வரர்

இறைவி : குணசுந்தரி என்கிற பெரியநாயகி

தீர்த்தம் : அரசடித்தீர்த்தம்

தலவிருட்சம் : அரசமரம்

ஆகமம் : காமிகம்

அமைவிடம்:

திண்டிவனத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 25 கி.மீ. தொலைவில் உள்ள சாலையிலிருந்து 1 கி.மீ. உள்ளே திருஅரசிலி உள்ளது. தற்போது ஒழுந்தியாம்பட்டு என இவ்வூர் அழைக்கப்படுகிறது.

தலவரலாறு

தொண்டை நாட்டுத் தேவாரத்தலங்களில் இத்தலம் 31வது தலம், மரங்களில் சிறந்த அரசமரத்தினடியில் பெருமான் விளங்குவதால் இத்தலம் அரசிலி எனப்பெயர் பெற்றது. வாமதேவ முனிவர் வழிப்பட்ட தலம், சத்திய விரதன் என்னும் சாளுக்கிய மன்னனின் பக்தியை அறிந்து இறைவன் அம்மன்னவனோடு மானுருவங் கொண்டு விளையாடிய தலம். அம்மன்னனின் மகன் இந்திரசேனனும் அரசிலிநாதரிடம் அளவற்ற பக்தி பூண்டு வழிபட்ட தலம். இந்திரசேனனின் திருமகள் சுந்தரி அரசிலிநாதரை வழிபட்டு இத்தலத்திலேயே வாழ்ந்து இறையடி சேர்ந்த தலம்.

திருக்கோயில் அமைப்பு

இக்கோவில் 2-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் 3 நிலை இராஜகோபுரம், ஒரு பிரகாரத்துடன் அமைந்துள்ளது.மூலவர் சுயம்புலிங்க வடிவில் அருள்மிகு அரசிலிநாதர் கிழக்கு நோக்கியும் அம்மன் பெரியநாயகி தனிச் சன்னதியின் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், ஆறுமுகப்பெருமான், சூரியன், பைரவர், சண்டேசுரர், நவக்கிரகம், நால்வர் சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலுக்கு எதிரே தலமரமான அரசமரமும், அரசடித் தீர்த்த மும், திருக்குளமும் உள்ளது.

தனிச்சிறப்பு

திருஞானசம்பந்தர் இத்திருத்தல இறைவனைப்பற்றி

“வண்டறை கொன்றை மான்மதி பாய்புனற் கங்கை

கோடல் கூவின மாலை மத்தமுஞ் செஞ்சடைக்குலாவி

வாடல் வெண்டலை மாலை மருவிட வல்லியந்தோள்மேல்

ஆடன் மாசுண மசைத்த வடிகளுக் கிடமரசிலியே”

என்று தேவாரம் பாடியுள்ளார்.

அவர் இத்தலத்திற்கு வந்த போது சில நாட்கள் இங்கு தங்கி வழிபட்டார் என இத்தலபுராணம் கூறுகிறது. அவர் தங்கியிருந்த அடையாளமாக கோயிலின் தென் கிழக்காக திருஞானசம்பந்தர் திருமடம் அமைந்துள்ளது. பத்ம புராணத்தில் அரசிலிக் காதை என்று நூல் இத்தலத்தைப் பற்றிய புராணவரலாற்றுச் செய்திகளைக் கூறுகிறது.

கௌமார மடம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள் இத்தலத்து இறைவன் மீது இருபதிகங்களும், அம்பிகை மீது ஒரு பதிகமும், முருகன் மீது திருப்புகழும் பாடியுள்ளார். அரசிலி அந்தாதி என்னும் நூல் தருமையாதீனம் 23வது பூரீ மகா சந்நிதானம் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

இத்தலத்திலுள்ள குலோத்துங்கச் சோழ மன்னனின் கல்வெட்டில் இவ்வூர் இறைவர் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மாத்தூர் நாட்டு ஒருகறையான குலோத்துங்க சோழ நல்லூர் திரு அரசிலி உடையார் ஆலால சுந்தரனார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின்படி ஒருகறை என்ற பெயரே பிற்காலத்தில் மக்கள் வழக் கில் ஒழுந்தியாம்பட்டு என வழங்கலாயிற்று.

 

திருவிழாக்கள்

வைகாசிமாதத்தில் விசாகப் பெருவிழா இத்தலத்தின் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

திருக்கோயில் தரிசன நேரம்

காலை 7.00 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திருக்கோயில் திறந்திருக்கும்.

போக்குவரத்து வசதி

திண்டிவனத்திலிருந்து பேருந்து வசதி உள்ளது.

தங்கும் வசதி

திண்டிவனத்தில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

தொடர்பு முகவரி

பரம்பரை அறங்காவலர், அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில், ஒழுந்தியாம்பட்டு, வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *