தலம் பெயர்: புறவார் பனங்காட்டூர்
இறைவன் பெயர் : பனங்காட்டீசர்
இறைவி பெயர்: சத்யாம்பிகை, புரவம்மை, மெய்யாம்பாள்

தல வரலாறு: சிவபெருமானை நிந்தித்துத் தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயினர். அவர்களில் சூரியனும் ஒருவன். அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்தார். தண்டனையால் சூரியன் ஒளியிழந்தான். தான் செய்த தவறுக்கு வருந்தி சூரியன் சிவபெருமானைப் பல தலங்களிலும் வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றான். சூரியன் வழிபட்ட தலங்களில் புறவார் பனங்காட்டூர் என்ற் இத்தலமும் ஒன்றாகும். ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாள் காலையிலும் சூரிய கதிர்கள் முதலில் சுவாமி மீதும், பின்பு அம்பிகை மீதும் விழுகின்றன.

கோவில் அமைப்பு: 4 நிலைகளையுடைய ஒரு சிறிய கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. கோபுர வாயில் நுழைந்து உள் சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப்பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனை மரங்கள் மூன்று உள்ளன. நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்திலுள்ளது. உள் வாயில் கடந்து சென்றால் சுவாமி சந்நிதியை அடையலாம். கருவறை சுற்ற்ப் பிரகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலா ரூபங்கள் உள்ளன. இவற்றில் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு காணத்தக்கது. மேலும் உள சுற்ற்றில சப்தமாதர்கள், ரிஷபாரூடர், மகாவிஷ்ணு, கஜலஷ்மி, நால்வர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, சண்டிகேசுவரர், நடராஜர், சோமாஸ்கந்தர் முதலிய சன்னிதிகள் உள்ளன.

அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி நுழைவாயிலில் துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். அம்பாள் சத்யாம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

பனை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட 5 தலங்களில் பனையபுரம் என்கிற புறவார் பனங்காட்டூர் தலமும் ஒன்றாகும்.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்திற்கான பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்திலுள்ள 10 பாடல்களையும் பாடுவர்கள சிவலோகம் சேர்வர் என்று தன் பதிகத்தின் 10வது பாடலில் குறிப்பிடுகிறார்.

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *