திருக்கோயில் அமைவிடம்
கடலூரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் கடலூர் முதுநகரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
 
இறைவி பெயர்
அருள்மிகு ஐந்து கிணற்று அம்மன்
 
 
தல வரலாறு
கடலூர் துறைமுக நகர், ஒரு நாள் சில பூசாரிகள் வழிபாட்டிற்குச் சென்று வரும் வழியில் (சென்ற இடம் வண்டிப்பாளையம்) நல்ல தண்ணிர் குளத்தில் எல்லோரும் குளித்துச் சென்றார்கள். அதற்குப் பிறகு ஒரு பூசாரி மட்டும் கடைசியில் செல்லும் பொழுது என்னை எடுத்துச் செல் என்ற குரல் ஒலிக்கவே பூசாரி திரும்பிப் பார்த்த பொழுது அங்கே யாரும் இல்லை. அப்போது அவர் மட்டும் தனித்திருந்தார். மறுபடியும் பத்தடி தூரம் தள்ளி வரவும் என்னைத் தூக்கிக்கொண்டு போ என மீண்டும் ஒலிக்கத் திரும்பி பார்த்த பொழுது மறுபடியும் யாரும் இல்லை. மூன்றாவது தடவையாக மீண்டும் குரல் ஒலித்தது. பூசாரி திரும்பி அக்குளத்தங்கரைக்குச் சென்று நின்றவுடன் நான் இங்குதான் இருக்கிறேன் என்று சொல்கிறாயே, ஆனால் என் பார்வைக்குத் தெரியவில்லையே எனச் சொல்லவும் ஒரு கல்லின் கீழிருந்து ஒரு பாம்பு வெளிப்பட்டு அவர் மேல் தவழ்ந்துகொண்டது. பிறகு மற்ற பூசாரிகளைச் சந்தித்து நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினார். பிறகு அந்த இடத்தில் சென்று அக்கல்லைப் பார்த்தார்கள். அது சலவையாளர் துணி துவைத்த கல்லாக உள்ளதே என நினைத்து அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். அக்கல்லைப் புரட்டியபோது அம்மன் திருவுருவம் சரியாக இருந்தது.
 
உடன் வந்த பூசாரிகளோடு அம்மனை எங்கு கொண்டுபோய் வைப்பது என்று எண்ணிக் கொண்டு இருக்கும்போது பாம்பு கழுத்திலிருந்து இறங்கிவிட்டது. இறங்கி நல்ல தண்ணிர் குளத்திற்குக் கிழக்கே சென்று தெற்கே திரும்பி நிறுவ வேண்டிய இடத்தில் வந்து கிழக்கே நோக்கி நின்றுவிட்டது. அதன் பின்னால் வந்தவர்கள் அம்மன் சிலையை அங்கேயே நிறுவிவிட்டார்கள்.
இப்போது திருக்கோயில் உள்ள இடம் முள் நிறைந்த காடாக இருந்நது. இந்த இடத்தில் பாம்பு மையம் கொண்டு மூன்று முறை படத்தால் அடித்தது. உடனே செங்கற்களை அடுக்கிவைத்து அதன்மேல் அம்மனை வைத்தார்கள். இந்த இடத்தில் உள்ளே வருவதற்கு அச்சமாக இருக்குமாம், பூசாரிகள் மட்டும் வருவார்கள், போவார்கள்.
 
ஒர் அம்மையார் மட்டும் விளக்கேற்றி வைத்து வழிபட வந்து போவார்கள். தொடர்ந்து வழிபாடு செய்துகொண்டு இருந்தார்கள்.
பூசாரிகள் ஒன்றுகூடி அங்கே கோயில் எழுப்புவது குறித்து சிந்தித்தார்கள். இந்த இடத்தில் பொய்கை ஒன்று இருந்தது. இந்தப் பொய்கையில் எப்படி கோயில் கட்டுவது என்று சிந்தித்தார்கள். நான்கு மூலைகளிலும் கிணறுகள் அமைத்து அதன் மேலே கருங்கல்லைப் போட்டு மூடி நான்கு பக்கமும் மதிலை எழுப்பிவிட்டார்கள். அம்மன் கருவறை மையத்தில் ஒரு கிணற்றை அமைத்து அதனை மூடி அதன் மேலே அம்மன் சிலையை நிறுவினார்கள். (அன்றிலிருந்து சிறப்போடு ஐந்து கிணற்றம்மன்) நான்கு கிணறுகள் சூழ்ந்து நடுவில் உள்ள ஒரு கிணற்றில் எழுந்தருளியதால் ஐந்து கிணற்றம்மன் எனப்பெயர் பெற்று இத்திருத்தலம் சிறப்புப்பெற்று வருகிறது. இத்தாயின் அருள் பெற்ற பக்தர்கள் அருளைப் பெற துடிக் கின்ற பக்தர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும். ஐம்பூதங்களை அடக்கி ஆள்வதாலே (ஐந்து கிணற்றம்மனாக) அம்பாள் இங்கே வீற்றிருக்கிறாள்.
 
திருவிழா
ஆடிமாதத்தில் நடைபெறுகின்ற செடல் திருவிழா மிகவும்
சிறப்பாக நடைபெறுகிறது. செடல் திருவிழாவிற்கு சுமார் 1 லட்சம் பேர் ஒரேநாளில் அம்மனை வழிபடுகின்றனர்.
 
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை 7.00 மணிமுதல் மதியம் 12 மணி வரையில் மாலையில் 400 மணிமுதல் இரவு 8 மணிவரை
 
அலுவலக முகவரி
செயல்அலுவலர்,
அருள்மிகு ஐந்து கிணற்று மாரியம்மன் திருக்கோயில்,
கடலூர் முதுநகர்.

 

Share:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *