காமத்தை வெல்வது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் கடவுளை நெருங்க விடாமல்..நம்மை உலக இச்சையின் பக்கம்
இழுத்துக்கொண்டு போகும் மிகப்பெரிய ராவணின் அஸ்திரம்..யுத்தத்தில் லக்ஷ்மணனை மூர்ச்சை இழக்க செய்த நாக அஸ்திரம் இதுதான்..விகாரங்களில் மிகப்பெரிய அஸ்திரம் காமம்..இதனால்தான் தெய்வங்களில் அவர்களின் தலைக்கு பின்னாலோ,காலுக்கு அருகிலோ காமம் என்ற பாம்பை வென்றதன் அடையாளமாக மிகப் பெரிய விஷப்பாம்பை காண்பித்து உள்ளனர்.. இந்தகாமம் என்பது மனதில் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ.விதைத்துள்ள இச்சையின் விதை..இதை ஆரம்பத்தில் நாம் நீக்காவிட்டால் இது நம்மை மூர்ச்சை இழக்க செய்துவிடும்.. மூர்ச்சை என்றால் நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பதே தெரியாத நிலை.

 இதனால்தான் காமம் மகா சத்ரு என்று கீதை சொல்கின்றது..கடவுளின் அருகில் செல்ல வேண்டுமானால் ஒருவர் முதலில் காமத்தை விடவேண்டும் என்று சொல்லப்படுகின்றது, உண்மையில் காமத்தை வெல்வது எளிது.. ஆனால், எப்பொழுதும் நம்முடைய மனதை பிஸியாக வைத்துக் கொள்பவருக்கே இது சாத்தியம்..ஏதாவது ஒரு ஆன்மீக பயிற்சியில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்.எங்கே காமம் உற்பத்தி ஆகின்றதோ முதலிலேயே எச்சரிக்கையாகி மனதை அதிலிருந்து விலக்க வேண்டும்..காமத்தை பஸ்மம் ஆக்கும் பரமாத்மா ஜோதியான தந்தை சிவபெருமான் மீது மனதை செலுத்தவேண்டும்..மன்மதனின் காமபாணம் சிவபெருமானிடம் செல்லுபடி ஆகவில்லை.. எனவே, மனம் இறைவன் மீது ஈடுபட..நம்முடைய மனம் சுத்தமடைய வேண்டும்.
முதலில் நம்முடைய கண்கள் எதிலாவது மூழ்கும் பொழுது அங்கேதான் காமம் உற்பத்தி ஆகின்றது..கண்கள் பார்த்து மனதிற்கு கொண்டு செல்லும்பொழுது அங்கே இச்சை உற்பத்தி ஆகின்றது.அந்த இச்சையின் சிறிய விதை பெரிய காமத்தின் விஷ விருட்ஷமாக வளர்ந்துவிடும்..அதில் உட்காரும் ஆசை என்னும் குரங்கு..ஒவ்வொரு கிளையாக தாவி விளையாட ஆரம்பிக்கும், கண்டிப்பாக ஒரே கிளையில் அமராது.. ஒன்றை பார்க்க இன்னொரு கிளை அதற்க்கு அழகாக தோன்றும்..காமம் ஒருவருக்குள் வந்துவிட்டால்.. அவர் காலப்போக்கில் எல்லோர் மீதும் அதை செலுத்த ஆரம்பித்து விடுவார்.. அதற்காக அவர் பல காரணங்களை சொல்வார்.
எங்கே காரணம் இல்லையோ,அங்கேதான் நிவாரணம்.. ஒருவரின் தேகத்தின் மீது பார்வை செல்லும் ஒருவருக்கு காமம் உற்பத்தி ஆகும்..உங்கள் கண்கள் எதிலும் மூழ்க கூடாது.எதில் உங்கள் கண்கள் நிலைபெருகின்றதோ அதனுடைய காட்சி உங்களை அறியாமல் உங்களிடம் நாள் முழுவதும் தென்பட்டுக்கொண்டே இருக்கும்.. எனவே, இறைவனின் கட்டளை உன்னை உடல் என்று உணராமல், நெற்றியின் மத்தியில் ஆன்மா என்றே உணர்ந்துகொள்..பிறரையும்
அப்படியே பார்க்க பழகு..பிறகு தேகத்தின் கவர்ச்சி ஒன்றும் செய்யாது.
இந்த உலகில் ராமனை போன்ற ஒரு சிலரே உள்ளனர். ராவணை போன்ற அநேகர் உள்ளனர். காரணம் இது ராவண ராஜ்ஜியம்..ராம ராஜ்யம் அல்ல.. ராவணின் காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை என்னும் ஆயுதங்களில் முதல் ஆயுதம் காமம்..இதை வெல்லவேண்டும் என்பதற்காக ரிஷிகள், முனிகள் வீட்டை விட்டு காட்டுக்கு சென்றார்கள், ஆனால் இறைவன் சிவபெருமானின் வாக்கு இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர்போல பற்றற்று அன்புடன் ஆத்ம அபிமானத்துடன் இருந்து மனதை ஜோதியான என்னிடம் செலுத்து என்பதே ஆகும்..பெரிய..பெரிய.. மன்னர்கள் கூட தன்னுடைய ராஜ்ஜியத்தை காமத்தினால் இழந்தனர்.
ஒரு காமம் வாழ்க்கையில் சத்திய நாசம் செய்துவிடும்.. காமம் உள்ளுக்குள் வந்துவிட்டால் அவன் பலவிதங்களில் பொய் பேச ஆரம்பித்து விடுவான்,அவன் காமத்தை நல்லது என்று அதன் பக்கம் பேசுவான்..இன்று இந்த உலகம் பொய்யாக மாறியதற்கு முக்கியகாரணம் காமம்..இந்த உடலும் பொய்..இந்த உலகமும் பொய்..இல்லற தர்மத்தை இறைவனுடைய வழியில் மீறாமல் இருப்பதே புருஷ லட்சணம்.. சத்தியவானை மீட்ட சாவித்திரியின் லட்சணம்.. ஆபாசத்தை பார்ப்பவர் ஒன்றோடு நிறுத்துவது இல்லை மேலும், மேலும், பார்த்துக்கொண்டே இருப்பார் இதை பார்க்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களுக்குள் ஒழுக்கமான கணவன் மனைவியாக கண்டிப்பாக வாழ முடியாது.
இவ்வளவு விவாகரத்து வழக்குகளுக்கும் காமமே கதாநாயகன்.. காமத்தினால் நிரந்தர சந்தோசப்பட்டவன் ஒருவனுமில்லை..ரிஷிகள் கூட காக்கையின் மலத்திற்கு சமமான சுகம் என்றே சொல்கின்றனர்..எனவே, மனதை சுத்த எண்ணங்களில் நிரப்பி ஜோதியான பரம் பொருள் சிவபெருமானை நினைத்து அவரை மகிழ்வுற செய்வோம்..கடவுளே மகிழ்ந்து விட்டால் வேறென்ன வேண்டும்.

ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும்.

 

ஆண்டாள் அவதரித்த நாள் :

✳ ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், கலியுகம் பிறந்து 98வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும், பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார், ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

✳ ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும்.

✳ ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர்.

✳ பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப்பூரம். அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம்.

✳ அன்னை உள்ளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். ஆடிப்பூரம் அன்று பூமி தாயினை வழிபட்டு அவளின் அருளை பரிபூரணமாக பெறுவோம்.

ஆடிப்பூர வழிபாட்டின் நன்மைகள் :

✳ எல்லா கோவில்களிலும் அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்துக்கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

✳ அம்மனுக்கு படைத்த வளையலை கர்ப்பிணிகள் கைகளில் அணிந்துக்கொண்டால், சுகப்பிரசவம் நிகழும்.

✳ ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது.

✳ ஆடிப்பூரத்தன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர்.

✳ ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு உண்டாகும்.

நடைபெறும் சிறப்பு தலங்கள் :

✳ அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக சிறப்பாக நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் நடைபெறும்.

✳ விரைமலர், குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும்.

✳ மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, கூழ் வார்க்கப்படும்.

சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற ஆண்டாள் பாதம் பணிவோம்….!

ஆடி அம்மாவாசை

நமது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களில் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் பித்ருக்களாவர். அவர்கள் ஒளி பொருந்திய சூட்சும தேகமுடையவர்கள். அவர்களை எப்போது வழிபடவேண்டும் என பார்ப்போம்.சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை என்றும், சூரியனை பிதுர் காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் அழைககப்படுகிறது.

எனவே சூரியனும், சந்திரனும் நமது முன்னோர்களின் வழிபாடு தெய்வங்களாகும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், இரண்டு மாதங்களில் வரும் ஆதாவது ஆடி, தை அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக காலம் காலமாக கருதப்பட்டு வருகிறது. மாதந்தோறும் வரும் மாவாசயைன்று இந்துக்கள் தனது முன்னோர்களை வழிபாடு செய்வது வழக்கம்.
ஆடி மற்றும் தை அமாவாசையின் தர்ப்பணம் செய்தால் முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும் என பெரியவர்களால் கூறப்படுகிறது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம். அதாவது அர்த்தஜாமம், காலைப்பொழுது பூஜைக்கு உகந்தது என்பதால் காலை முதலே விரதத்தை துவக்குகின்றனர்.

 

ஏன் முன்னோர்களை வழிபடவேண்டும் ?

நமது வாழ்வில் தினமும் எதாவது ஒரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது. தெரிந்து செய்யும் பாவங்கள் என்று அவை நீண்டு கொண்டே போகின்றனவே தவிர குறைவதில்லை.

மனிதப்பிறவி அரியது நம்மை அன்புடன் பேணி, அருமையாக வளர்த்து ஆளாக்குகின்றனர் பெற்றோர். எவ்வித சுயநலமுமின்றி பாசத்தை கொட்டி பராமரிக்கும் தந்தையரை சரிவர புரிந்து கொண்டு தங்கள் கடமைகளை செய்பவர்கள் வெகுசிலரே!நமக்கு நல்வாழ்வு அளித்து சென்ற பித்ருக்களுக்கு பித்ரு தர்ப்பணபூஜையை செய்யாமல் தவறவிடுகின்றனர் சிலர். பித்ருக்களை திருப்தி செய்வதற்குத்தான் தர்ப்பணபூஜை.
தேவலோக மூலிகையான தர்ப்பையால் எள் வைத்து ஜாதி, மத பேதமின்றி அனைவரும் தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விப்பது கடமை.மிகபுராதணமான நூல்களும், உபநிஷத்துக்களும் பித்ருபூஜையின் மகத்துவத்தை சிறப்பாக கூறியுள்ளன.
திருவண்ணாமலையில் இன்றும் சிவபெருமான் வல்லாள மகாராஜவுக்கு தர்பணம் கொடுப்பது விழாவாகவே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாகவே தினமும் பித்ருக்களை நினைத்து பூஜித்து விட்டு மற்ற காரியங்களை தொடங்கவேண்டும். அந்த தினத்தில் எந்த ரூபத்திலும் பித்ருக்கள் நம்மிடையே வருவார்கள். அதனால் அன்றைய தினத்தில் நம் வீடுதேடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடுவது அவசியம்.
தினமும் காகத்திற்கு ஒருபிடி அன்னம் வைத்துவிட்டு பிறகு உண்பது பலவித தோஷங்களையும் போக்கும். காகத்தின் மூலம் பித்ருக்களுக்கு அவைபோய் சேரும்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, சூரிய, சந்திர கிரண காலங்கள், மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஏகாதசி, சப்தமி, துவிதியை போன்ற நாட்களில் பித்ரு தர்ப்பணம் பூஜை செய்வது நல்லது.ஆண் துணையற்ற எந்த பெண்ணும் தன்னை ஆதரித்து காப்பாற்றி இறந்து போனவர்களுக்கு நன்றிக்கடனாக பித்ரு தர்பணம் பூஜையை செய்யலாம்.
இதை காருண்ய பித்ரு தர்ப்பணம் என்பவர். கேரளத்தில் உள்ள திருவல்லா கோயிலில் பெண்கள் பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது அதே கலாச்சாரம் குற்றாலம் அருவிக்கரை மற்றும் பாபநாசம் போன்ற பகுதிகளிலும் பரவிகடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நம்மை ஆசீர்வதித்து காப்பாற்ற பித்ருக்கள் எப்போதும் தயாராக உள்ளபோது நாம் அவர்களை மறக்கலாமா? முன்னோர்களை வழிபட்டு முன்னேற்றமடைவோம்.

ஆடிக் கிருத்திகை

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட பெருமைகள் நிறைந்த ஆடிக் கிருத்திகை தினம் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருத்தணி, பழனி, திருச்செந்தூர் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. அறுபடை வீடு தலங்களிலும், சென்னையில் உள்ள முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகனுக்கு உகந்த கிருத்திகை

முருகப் பெருமானுக்கு, ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில், தை கிருத்திகை, தை பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விழாக்கள் முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. அந்த வகையில், ஆடி கிருத்திகை தினம் மிகவும் விசேஷமாக, இன்று தமிழகம் முழுவதும் உள்ள, முருகன் கோவில்களில், சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடி கிருத்திகை விரதம்

தை மாதக் கார்த்திகையை விட ஆடி மாதக் கார்த்திகை சிறப்பானதாக உள்ளது. இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

அறுபடை வீடுகள்

அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகையும் விழாவும் ஒன்று. முக்கியமாக திருத்தணியில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருத்தணியில் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி ரயில், பஸ் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி நகரில் குவிந்தனர். ஆடி பரணி நட்சத்திரதினமான நேற்று அதிகாலை திருத்தணி தணிகை முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

அலங்காரத்தில் முருகன்

முருகனுக்கு தங்க கவசமும் வைர கிரீடமும் பச்சை மரகத கல்லும் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மலைக்கோயில் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் பலவகை மலர்களாலும் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

 

ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர். அப்படி வழிபடக் காரணம் என்னப பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;
அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்

அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்; அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதாப யார் சொன்னது.

இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.

1. வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

சங்கடஹர சதுர்த்தி

விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு.”ஹர” என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

 

வரலாறு :-

விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.

அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் வரும் “சங்கடஹர சதுர்த்தி” நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

விரதத்தின் பலன்கள் :-

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும் என்றும் நம்பப்படுகிறது.

ஆடி பௌர்ணமி

ஆடி மாதத்தில் வருகிற பௌர்ணமி ரொம்பவே விசேஷம். மாதந்தோறும் வருகிற பௌர்ணமியில் கோயிலுக்குச் சென்று, வழிபடுவதும் விசேஷம்.

குறிப்பாக, பௌர்ணமியில்தான் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து வேண்டிச் செல்வார்கள். ஆடி மாதம் பௌர்ணமியான  அம்மன் கோயில்களில் விசேஷ பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஆடி மாதம் பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் வழிபாட்டுக்கும் உகந்த அற்புதமான நன்னாள். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சார்த்தி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால், குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும் ஞானமும் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்!

ஆடி பௌர்ணமியும் சிறப்பு

அம்மனை விளக்கேற்றி வழிபடுவதும் மிகுந்த பலனைத் தரும். எனவே நாளைய தினம் பெண்கள், அம்மன் கோயில்களில் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்!

பொதுவாகவே பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது விசேஷம். குறிப்பாக, ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிகள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோல் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு.

கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரதத்தை அனுஷ்டித்து பிரார்த்தித்துக் கொள்வார்கள். வசதியுள்ளவர்கள், கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபட்டு விருந்து அளிப்பார்கள்.

ஆடி – செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

ஆடி செவ்வாய்

ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆடி செவ்வாயில் அவ்வையார் பாட்டிக்கு கொழுக்கட்டை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தென் மாவட்டங்களில் இன்றைக்கும் அவ்வையார் வழிபாடு நடைபெறுகிறது.
 

செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய்த் தேய்த்து குளிக்க வேண்டும்.

ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி என்பது என்பது பழமொழி. இதிலிருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேர்த்து நீராடுதலில் முக்கியத்துவம் விளங்கும் அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு.பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
 
தமிழத்தின் தென் பகுதிகளில் ஆடிச்செவ்வாய் அன்று அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.
 
பெண்களுக்கு சவுகரியமான ஒரு ஆடிச்செவ்வாயில் ஒரு வீட்டில் விரதம் இருக்கும் பெண்கள் கூடுவார்கள். அன்று முழுவதும் கைக்குழந்தைகள் தவிர வேறு எந்த ஆணுக்கும் அந்த வீட்டில் இடம் கிடையாது. இரவு பத்து மணியளவில் பூஜை துவங்கும். வயதில் முதிர்ந்த பெண்மணி அவ்வையின் கதையையும் அம்மனின் கதையையும் மற்றவர்களுக்கு கூறுவார்.
 
இப்பூஜையில் செய்யப்படும் உப்பில்லாகொழுக்கட்டை மிகவும் விசேஷமானது. இதனை வீட்டில் உள்ள பெண்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு தர கூடாது. இந்த பூஜைக்கு புங்க மர இலைகளை இட்லி தட்டில் வைத்து அதன் மேல் கொழுக்கட்டைகளை செய்து வேக வைக்க வேண்டும். பிடி கொழுக்கட்டையோடு அல்லாமல் கொழுக்கட்டை அடை செய்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
 
ஒரு நுனி இலையில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து புங்க இலைகளையும் புளிய மர இலைகளையும் பரப்பி அதன் மேல் செய்து வைத்த அடை கொழுக்கட்டைகள், மற்றும் வெற்றிலை, பாக்கு, பழங்களோடு தேங்காய் உடைத்து வைத்து விநாயகரையும் ஔவையாரையும் நினைத்து படைக்க வேண்டும். பூஜையில் எத்தனை பெண்கள் கலந்து கொள்கின்றனரோ அத்தனை அடை கொழுக்கைடைகளை நெய்வேத்தியம் செய்து அதில் விளக்கு போட்டு பூஜை முடிந்த உடனேயே அதை சாப்பிட வேண்டும். இக்கொழுக்கட்டைகளில் உப்பில்லாவிட்டாலும் தேங்காய் நிறைய சேர்ப்பதினால் ருசியாகவே இருக்கும்.
 
அத்தோடு ஒரு தேங்காய் மூடியில் சிறிது தேங்காயை துருவி வைத்து கொழுக்கட்டைகளுடன் சேர்த்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
 
இத்தேங்காய் பூவையும் பெண்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். இந்த பிரசாதங்களை ஆண்கள் கண்டிப்பாக பார்க்க கூடாது என்பது எழுதாத சட்டமாக இருந்து வருகிறது.
 
பொதுவாக பூஜைகளில் கலந்து கொள்பவர்களில் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்களே முன்னின்று செய்வார். அவரே இப்பூஜையில் மிக முக்கியமான ஒன்றான அவ்வையார் கதையை கூறுவார். இதனை பூஜையின் பொழுது மட்டுமே சொல்லி கேட்க வேண்டும்.இது இப்பூஜையின் வரலாற்று ஆரம்பத்தை சொல்லும் கதையாகும்.இதனை மூன்று முறை சொல்லி சூடம் ஏற்றி நெய்வேத்தியம் செய்து படையலை முடிக்க வேண்டும்.
 
அடுத்த நாள் விடியற் காலையிலேயே எழுந்து இந்த பூஜை செய்த இடத்தை சுத்தம் செய்து பிள்ளையார் மற்றும் பயன்படுத்திய இலைகளை யார் கண்ணிலும் படாமல் எடுத்து சென்று நீரில் கரைத்து விட வேண்டும். பூஜை செய்த நாளுக்கு மறுநாள் யாருக்கும் எந்த பொருளையும் கடனாகவோ, தானமாகவோ தருதல் கூடாது. இந்த பூஜையை கடைப்பிடித்தால் தீர்க்க சுமங்கலித்துவம், நீங்காத செல்வம், இணக்கமான கணவன், நல்ல குழந்தைகள் வாய்க்கும் என்பர். மணமாகாத கன்னியர்க்கும் குழந்தையில்லா தம்பதிகளுக்கும் இந்த பூஜை ஒரு வரப்பிரசாதம். பாட்டி நோன்பு இருந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.
 
சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அவ்வை மூதாட்டியை தெய்வமாக்கி, நோன்பிருந்து வணங்குகிற வழக்கம் இன்றைக்கும் பாரம்பரியமாக இருந்து வருகிறது. ஆடி செவ்வாய்க்கிழமையன்று குமரி மாவட்டத்தில் தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் போன்றவை தயாரித்து அம்மனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி பிறப்பே செவ்வாய்கிழமையன்று பிறப்பதால் முதல் நாளில் இருந்தே அவ்வையார் பாட்டியை வழிபடத் தொடங்கி விடுவார்கள்.
 
அரிசியில் செய்யப்படும் இந்த கொழுக்கட்டை புரதச் சத்து அதிகம் கொண்டது. பெண்கள் உடல்நலத்துக்கு மிகவும் உகந்தது எனவேதான் இந்த கொழுக்கட்டை படையலை பெண்கள் மட்டுமே பிரசாதமாக சாப்பிடுகிறார்கள். ஆடி மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த கோயிலுக்கு வந்து கொழுக்கட்டை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைத்தால் திருமணம் கைகூடும, பெண்களுக்கு செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்