அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம்
ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள்.
 
கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம் :-

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.
அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.
அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.
 
“பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப் பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்”
அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம்.
 
ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் .அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
 
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.
 
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.
சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.
 
ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
 
சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
 
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.
இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா?
 
ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது.
சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம்.
குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
 
சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது.
 
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது .
புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது.,
அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும்.
 
அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது.
பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான்.
 
இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.
பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.
 
ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.
சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.
இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிசேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான சிவ கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.
 
 
 

பிரதோஷம்

சர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு :-

இறைவழிபாடு குறைகளை களைந்து நிறைவினை தரும். முக்கியமாக, புண்ணிய நாட்களில் இறைவனை வழிபாடு செய்வது நிறைந்த பயனைத் தரும். காலத்துக்கு அதிக வலிமையுண்டு. காலத்தில் செய்வதற்கு அதிக பயன் கிட்டும். இறைவனை எப்பொழுதும் வழிபட வேண்டும். ஆனால் புண்ணிய தினங்களில் வழிபட்டால், ஒன்றுக்கு கோடி மடங்கு மிகுதியான உயர்ந்த பயன் விளையும். இந்நாட்களில் அன்புடன் இறைவழிபாடு புரிபவர்கள் பாவங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெற்று, இகம், பரம், வீடு என்ற மும்மை நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.

பிரதோஷம் எப்படி ஏற்பட்டது?

நீண்ட காலத்திற்கு முன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் போர் மூண்டது. இருபுறத்திலும் ஏராளமான பேர் மடிந்தனர். எனவே தேவர்கள், பிரமனை அடைந்து சாகாமல் இருக்க என்ன வழி என ஆராய்ந்தனர்.

அவர், தேவர்களை நாராயணனிடம் அழைத்துச் சென்று முறையிட அமிர்தம் உண்டால் சாகாமலிருக்கலாம் என்று அவரும் யோசனை தெரிவித்தார்.

பாற்கடலைக் கடைந்தால்தான் அமிர்தம் எடுக்க முடியும், அசுரர்கள் தயவில்லாமல் பாற்கடலை கடைய முடியாது. அவர்களை சேர்த்துக் கொண்டால், அசுரர்களுக்கும் பங்குதர வேண்டும். வேறு வழியில்லாததால், தேவர்கள் அசுரர்களையும் துணைக்கழைத்துக் கொண்டனர்.
தந்திரசாலியான, விஷ்ணுவின் ஏற்பாட்டின்படி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். மேரு மலையை மத்தாகவும், ஆயிரம் நாக்குடைய வாசுகியைக் கயிறாகவும் கொண்டு, வால்பக்கம் தேவர்களும் தலைப்புறத்தை அசுரர்களும் பிடித்துக் கடைய ஆரம்பித்தனர்.
இவ்வாறு ஆயிரம் ஆண்டுகள் கடைந்தனர். இரண்டு பக்கத்தினரும் மாறி மாறி இழுத்ததால் வாசுகியின் உடல் புண்ணானது. அவன் தன்னையும், அறியாமல் வலி பொறுக்காமல், ஆயிரம் வாயினாலும் விஷத்தைக் கக்கிவிட்டான். அச்சமயத்தில், கடலில் இருந்து விஷம் பொங்கியது. இப்படி பாம்பினால் கக்கப்பட்ட ‘காளம்’ என்று நீல விஷமும், பாற்கடலில் பிறந்த ‘ஆலம்’ என்கிற கருப்பு விஷமும் சேர்ந்து கருப்புப் புயல் போல் கொடிய வெப்பமும். கடும் புகையும் கொண்டதாக மாறி உலகை வருத்தத் தொடங்கியது.
தலைப்பக்கம் நின்ற பல நூற்றுக்கணக்கான அசுரர்கள் எரிந்து சாம்பலாக தேவர்கள் தறி கெட்டு, இடமும் வலமும் ஆக ஓடி ஒளிந்தனர். எல்லோரும் பயந்து போய், ஈசனிடம் முறையிட கயிலங்கிரி சென்றனர்.

நந்தியம் பெருமானிடம் அனுமதி பெற்று உள்ளே சென்று சிவபெருமானிடம் அழுது, தொழுது முறையிட்டனர். அப்பொழுது ஈசன் தன் நிழலில் இருந்து தோன்றியவரும், பேரழகரும் ஆகிய ‘சுந்தரர்’ என்னும் அணுக்கத் தொண்டரை அனுப்பி “அவ் விஷத்தை இவ்விடம் கொண்டுவா!” என்று பணிந்தார்.
சிவபெருமான் கட்டளைப்படி சுந்தரரும், கொடிய ஆலகால விஷத்தை ஒரு துளியாக கொண்டு வந்தார்.
எல்லோரும் அதிசயயிக்க, சிவபெருமான் ஒரு கண நேரம் ‘விஷாபகரணமூர்த்தி’ என்னும் ரௌத்ர வடிவம் தாங்கி அவ்விஷத்தை உண்டருளினார். அப்போது தேவியார் அவ்விஷத்தை ஈசன் உண்டால் சகல புவனமும் அழியுமே என்று கருதி அவருடைய கழுத்தில் தங்கும்படி செய்தாள். ‘கண்டத்தில்’ விஷத்தை நிறுத்தியதால் ‘நீலகண்டர’ ஆனார். விஷம் கொண்டுவந்த ‘சுந்தரர்’ ‘ஆலால சுந்தரர்’ என்று அழைக்கப்பட்டார்.

கயிலையில் ஈசன் விஷம் உண்டபிறகு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அனைவரும் அவரை போற்றித் துதி பாடியவாறு இருந்தனார்.

ஏகாதசியன்று விஷம் உண்ட பெருமான் துவாதசி முழுவதும் பள்ளி கொண்ட நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் எழுந்து, உமையவனை ஒரு பக்கம் கொண்டு சூலத்தை சுழற்றி மருகத்தை ஒலித்து ‘சந்தியா நிருத்தம்’ எனும் நடனம் ஆடினார்.
இந்நாட்டியத்தை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். நந்தி சுத்த மத்தளம் வாசிக்க அனைவரும் ‘ஹரஹர’ என்று துதித்தனர்.

அன்று முதல் பெருமான் ஒவ்வொரு நாளும் அந்தி வேளையில் இக்கூத்தை நிகழ்தி வருகிறார். இவ் கூத்தில், சரஸ்வதி வீணையையும், பிரமன் தாளத்தையும், விஷ்ணு புல்லாங்குழலையும் பூதங்கணங்கள் எண்ணற்ற இசைக்கருவிகளையும் இசைக்கின்றனர் என்பர்.

பிரதோஷ காலங்களும், விரத மகிமைகளும் :-

ஐந்து வகையான பிரதோஷ காலங்கள் உண்டு. அவையாவன 1. நித்திய பிரதோஷம் 2. பஷ பிரதோஷம் 3. மாத பிரதோஷம் 4. மஹா பிரதோஷம் மற்றும் 5. பிரளயப் பிரதோஷம். தினமும் வரும் மாலை வேலைகள் நித்திய பிரதோஷம் எனவும், வளர்பிறை பிரதோஷங்கள் பஷ பிரதோஷம் எனவும், தேய்பிறை பிரதோஷங்கள் மாத பிரதோஷம் எனவும், தேய்பிறை சனிக் கிழமைகளில் வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனவும், பிரளய காலத்தில் வரும் பிரதோஷங்கள் பிரளய பிரதோஷம் எனவும் வழிபடப்படுகிறது.

பிரதோஷ காலங்களில் உபவாசம் இருந்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் செய்ய வேண்டும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்கிறார். எனவே இக் காலங்களில் ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்வது மிகச் சிறந்த பலன் அளிக்கும். ” சிவாய நம ” என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பது மிகுந்த நன்மைகளை தரும். சிவ புராண பாடல்களை பாடியும் எம் பெருமானை வழிபடலாம். சிவ பெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிய நேரம் ” கார்த்திகை மாத சனிக் கிழமை ” தினம். பிரதோஷ தினம், மும்மூர்த்திகளும், தேவர்களும் ஒன்று சேர்ந்து உபவாசம் இருந்த திருநாளாகும். கார்த்திகை மாத சனிப் பிரதோஷம் மிகச் சிறப்பு.

நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.

வைகாசி விசாகம்

ஆறுமுகப் பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம் ஆகும். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் ஆலயம், கந்த கோட்டம் முருகன் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது நம்பிக்கை. வைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.

வைகாசி விசாகம் பற்றிய புராண கதை:
பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன. அதனைக் கண்ட முனிவர், “நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்” என்று கட்டளையிட்டார். தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் ‘மீன்களாக மாறக்கடவது’ என்று சாபமிட்டார். அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது “நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்” என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான். இத்தகைய சிறப்பு வைகாசி விசாக நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.

இறை வழிபாட்டு முறை

கோயில்களுக்கு சென்று இறைவனை வணங்கும் போது முக்கியமான மூன்று வழிமுறைகள் உள்ளதாக ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1. உத்தம நமஸ்காரம்: லட்சுமி வாசம் செய்யும் வேதரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களை இணைத்து, இதயத்திற்கு
அருகில் மார்பிற்கு நேரே மையத்தில் வைத்து, மனதில் மட்டுமே மந்திரங்களைக் கூறி இறைவனை ஒருநொடியேனும் மனதார வணங்க வேண்டும்.
மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்குவதை இறைவன் செவிசாய்த்து கேட்பான் என்பது ஐதீகம்.

2. அஷ்டாங்க நமஸ்காரம்: இவ்வகையான நமஸ்காரமுறை ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இம்முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம் எட்டு;
அங்கம் உடற்பாகம்) தரையில் படும்படியாக வீழ்ந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு
தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாதநுனி ஆகிய உடற்பாகங்களை தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு இறைவனின்
திருப்பாதத்தை சரணடைந்தால் வாழ்வில் பாவங்கள் நீங்கி நற்கதி உண்டாகும்.

3. பஞ்சாங்க நமஸ்காரம்: இந்த நமஸ்காரமுறை பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகையான வணங்கல் முறையில் பெண்கள் தங்களது பஞ்சாங்கத்தையும் (பஞ்சம் ஐந்து; அங்கம் உடற்பாகம்) இறைவனிடம் முழுமையாக சமர்ப்பணம் செய்து வணங்க வேண்டும். இம்முறையில் தலை, இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதநுனிகளை பூமியில் வைத்து இறைவனை வணங்கிட நற்பலன்கள் கிட்டும்.

சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்

சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் ( குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.

இவ்வாறு உருவான சித்திரகுப்தன் பாப புண்ணிய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது.

அறியாமல் செய்த பாபங்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று விசனப்பட்டு அறியாமல் செய்த பாபங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவபெருமான் சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளிவருகிறார்.

சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி.

சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் இருக்கிறது. முடிந்தவர் நேரில் அந்த கோவிலுக்கு சென்றும் முடியாதவர் மனதளவிலும் சித்திரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.

சித்ர_குப்தனை_வழிபடுவோம்

“திதி பார்த்து வழிபட்டால் விதி மாறும்” என்பார்கள். விதியை வெல்லும் ஆற்றல் யோகமான திதிகளில் செய்யும் வழிபாட்டிற்கு உண்டு. (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) அந்த வகையில் திதிகளில் #அமாவாசை திதியும், #பவுர்ணமி திதியும் மிக முக்கியமான திதிகளாகும்.

ஒன்று நிலவு நிறைந்த நாள், மற்றொன்று நிலவு மறைந்த நாள். அன்றைய தினம் கடல் அருகில் நீங்கள் சென்று பார்த்தால் கடல் நீர் மேல் நோக்கி அதிகமாக எழுவதைப் பார்க்கலாம். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) அலை எழும் அன்றைய தினம் நாம் விரதம், வழிபாடுகளை மேற்கொண்டால் அலைபாயும் உள்ளங்களுக்கு அமைதி கிடைக்கும்.

மாதந்தோறும் பவுர்ணமி வந்தாலும், சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு மட்டும் “சித்ரா பவுர்ணமி” என்று பெயர் சூட்டுகின்றோம். காரணம் சித்திரை மாதத்தில் சூரியன் உச்சம் பெறுகிறார். அந்த மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று சந்திரன் முழுமையடைகின்றார்.

இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். (திருநெறிய தமிழோசை – சைவமும் தமிழும்) இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ர புத்திரன் என்ற பெயரும் வைத்தார்.

இந்த சித்திர புத்திரன் (சித்ர குப்தன்) சித்ரா பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

பூஜையின்_பலன்:

சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.

இந்த நாளில் சித்ரகுப்தனின் அருள் பெற வேண்டியும், விஷேச பூஜைகளுடன் சிவபெருமானை வழிபடும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி சிறப்பு பெறுகிறது.

சித்ர_குப்தனுக்குரிய_வழிபாட்டுப்_பாடல்

பாவ புண்ணயம் பதிந்து வைக்கின்ற
தேவ தேவனே! சித்ர குப்தனே!
ஆவல் கொண்டே அகத்தினில் நினைத்துப்
பூவைச் சூட்டிப் போற்றுகின்றேன் நான்!
எனது பாவத்தின் எண்ணிக்கை குறையவும்
தனது புண்ணியம் தழைத்து ஓங்கவும்
இன்று முதல் நீ இனியதோர் பாதையை
அமைத்துக் கொடுத்தே அருளினைக் காட்டுக!
உணவும் உடையும் உறைவிட மனைத்தும்
தினமும் கிடைக்க திருவருள் கூட்டுக!

ௐ||ௐ||ௐ ——— திருச்சிற்றம்பலம் ——— ௐ||ௐ||ௐ

ஆன்மிகம் என்பது என்ன ?

ஆன்மிகம் என்றால் அன்புதான்

“வேதத்துக்கு நிகரான மந்திரம் …”

திருமூலர் திருமந்திரம் :-
யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.

எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.

பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.
இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.

இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை.

அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.
நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.

ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.

சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.

சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.

சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.

இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம்.

ஆன்மீகம் என்றால் அன்புதான்.

அன்பே சிவம் .

ராம நவமி

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார்.

சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார்.

14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளை யில் சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது. ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது.

தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம்.

பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனர், ராமர் மற்றும் கிருஷ்ணர். இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்க ளிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான்.

ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவ ரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனால் தான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.

ஏன் நவமியில் அவதரித்தார்

ஒரு சமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காம லிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன.

திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரை யும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.

ராம நாம மகிமை

ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்ற ப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்த போது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான்.

அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்த போதும், அவரது திருநாமத்தின் மகிமையால் தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்.

ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

ஸ்ரீராமநவமி உற்சவம் இருவிதமாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, கர்ப்ப உற்சவம் மற்றொன்று ஜனன உற்சவம்.

கர்ப்ப உற்சவம்

ராமநவமிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னாலேயே இந்த உற்சவம் தொடங்கப் படும். தினமும் ராமர் படத்துக்கு அர்ச்சனை செய்து, ராம நாமத்தை ஜபித்து, விரதம் இருந்தும் வழிபடுவார்கள். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல் போன்ற பிரசாதங்களை நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

ஸ்ரீராமநவமி அன்று பானகமும் நீர்மோரும் கட்டாயம் நிவேதனம் செய்வார்கள்.

காரணம், கானகத்தில் விஸ்வாமித்திர முனிவரோடு வாழ்ந்த போது அவர்கள் தாகத்துக்கு நீர்மோரும் பானகமும் பருகினார்கள்.

அதையொட்டியே இவை நிவேதனம் செய்யப்படுகி ன்றன. அன்று முழுவதும் ராமநாமத்தை ஜபித்து உபவாசம் இருந்தால் வாழ்க்கையில் சகல சம்பத்து களோடு வெற்றியும் நிம்மதியும் உண்டாகும் என்பது நிச்சயம்.

ஜனன உற்சவம்

இந்த உற்சவம் ஸ்ரீராமநவமி அன்று தொடங்கி பத்து நாட்கள் நடத்தப்படும். பத்தாம் நாள் சீதா கல்யாண மும் பட்டாபிஷேகமும் மிக சிறப்பாக நடைபெறும். இந்தப் பத்துநாட்களும் பஜனை, ராமாயண பிரவச னம் என கோலாகலமாகக் கொண்டாடுவார்கள் பக்தர்கள்.

பானகம் நீர்மோரோடு ஆரம்பிக்கும் நிவேதனம் பத்தாம் நாள் கல்யாண ஆராதனையாக நிறைவு பெறும். மானிடத் திருமணத்துக்குச் செய்வது போலவே பலவகையான பதார்த்தங்கள் செய்து அன்னதானமும் நடைபெறும். இந்த கல்யாண விருந்தை உண்டால் மனச்சோர்வு, கவலை ஆகியவை நீங்கும்.

ஆரோக்யம் உண்டாகும் என்பர். உற்சவத்தின் கடைசி தினத்தன்று அதிகாலை முதல் பொழுது சாயும் நேரம் வரை பக்தர்கள் ராம நாமத்தை உச்சரித்தபடி இருப்பர்.

அகண்ட நாம பஜனை என்று சொல்வார்கள். தீராத கவலை, துக்கம், வறுமை, மனப்பிணி போன்றவை யாவும் அகண்ட நாமத்தில் கலந்துகொ ண்டு ராமநாமத்தை உச்சரித்தால் சூரியனைக் கண்ட பனிபோல் மறைந்து விடும்.

ராம நவமி விரதம் இருக்கும்முறை

மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறே ன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா, என்று வேண்டிக் கொண்டு விரதத்தை ஆரம்பிக்கவேண்டும்.

அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது.

கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள்.ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசையிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்க வேண்டும்.

குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெயராம என்று மனதார உச்சரிக்க வேண்டும் பின்பு, வழக்கமான பணிகளுக்குச் செல்லலாம். பகலில் ஒரே ஒரு முறை மட்டும் சைவ உணவை உண்ணலாம். மற்ற நேரங்களில் பால், பழம், மோர் அருந்தலாம். புகையிலை, வெற்றிலை பாக்கு போன்றவற்றைக் கட்டாயமாக விலக்கவேண்டும்.

ஸ்ரீராமநவமி அன்று ராமர் திருவுருவ படத்தை அலங்கரித்து மஞ்சள் வஸ்திரம் சாத்தி வழிபடவேண்டும். பின்னர் மனதை ஒரு நிலைப் படுத்தி ஸ்ரீராமஜெயம் என்று 108,1008 என அவரவர் வசதிப்படி எழுதலாம்.

நீர் மோர் பானகம் ஆகியவற்றோடு சிறப்பான விருந்து சமையலும் செய்து ராமருக்குப் படைக்க வேண்டும். நிறைவாக வடையையும், வெற்றிலையை யும் அனுமனுக்குப் படைக்க வேண்டும்.

பின்னர் விரதத்தை நிறைவு செய்துவிட்டேன். நல்லவை யாவும் அருளிக் காப்பாயாக! என்று வேண்டிக்கொண்டு உணவு அருந்தலாம். அன்றைய தினம் கட்டாயம் நீர் மோரும், பானகமும் பருக வேண்டும். அன்று இரவு லேசான உணவாக எடுத்துக்கொள்ளுதல் நலம்.

இப்படி ஸ்ரீராமநவமி விரதத்தை கடைப் பிடித்து வந்தால் மனநிம்மிதி, வெற்றி, செல்வம் ஆகியவை பெருகும்.

இதே விரதத்தை ஜனனகால விரதமாக (இதனை கல்யாண விரதம் எனவும் சொல்வதுண்டு) அனுஷ்டிக்க நினைப்பவர்கள் ராமநவமியில் இருந்து தொடங்கி ஒன்பது நாட்கள் மேற்சொன்னபடி விரதம் இருக்கவேண்டும்.

பத்தாம் நாளன்று காலை ராமருக்கு வழிபாடுகள் செய்து கல்யாண சமையல் போல விருந்துணவு படைக்க வேண்டும். நிறைவில் வடையும் வெற்றிலையும் அனுமனுக்கு சமர்ப்பணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

இந்த வகையில் விரதத்தை கடைப்பிடித்தால் திருமணத் தடைகள் நீங்கும். தம்பதிகளிடம் ஒற்றுமை ஏற்படும். மனக்குழப்பங்கள் தீர்ந்து வாழ்வில் இன்பம் பெருகும்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென் றிரண்டெழுத்தினால்..

ஸ்ரீ ராம ஜெயம்..

விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம்

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.

இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

குரு சிஷ்யன் உறவு

குரு என்ற அருள் என்பது அவர் உடலின் வாழ்வு என்ற காலத்திற்கும், உடலின் சமாதி என்ற நிலைகளுக்கு அப்பால் எப்போதும் நிலைத்து நீடித்துக் கொண்டே இருப்பதாகும்.
குருவின் இருப்பை எவரும், அல்லும் பகலும், கண்டங்களை, வருடக் கணக்கினைக் கடந்தும் எப்போதும் உணரலாம். அவர் இப்போது இல்லை என்று உடலின் இருப்பை மட்டும் கருத்திலே கொண்டால், ஏமாற்றம் சீடனுக்கு மட்டுமே தான்.

எட்டவில்லை அறிவிற்கு என்றால் உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்துகொள்ளும்?
என்று குரு கேட்பதை மறக்கவே கூடாது.
நாம் இப்போது பல மகான்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறோம்.. வெவ்வேறான வடிவம் கொண்ட இறை அருளைப் பார்த்ததும், நமக்குள்ளே என்ன நிகழ்கிறது என்று கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும்.இன்னமும் கோடிக் கணக்கானோர் குருவின் முக்கியத்துவம் கேள்விப் படாதோரும் உலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது நாம் நமது வாழ்வோடு அருளுக்காகவும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்..
நமது கவனம் என்பது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, அந்த நிலையிலே நமக்கு வருகின்ற பல தகவல்கள், நாம் நோக்கிய சில விசயங்கள், நமக்குள் திணிக்கப்பட்ட சில விசயங்கள் என்று பல கட்டங்களிலே இருந்து நமக்குள் உலக விசயங்கள் வருகின்றன.
நமக்கு உலகில் வாழ பொருள் வேண்டி இருக்கிறது.. இப்போது நமது பொருளாதார நிலை, அரசியல் நிலை, மக்கள் வாழும் முறை, சமுதாயத்திலே இருக்கிற பல விசயங்களிலே நாம் கலந்துகொண்டே தான் ஆன்மீகத்திலும் உயரவேண்டி இருக்கிறது.
இருப்பினும், அருள் என்ற குருவின் நிலையிலே நாம் தியானித்து உயரும் போது, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைத்து சேகரித்த பணம், செய்தி, கௌரவம், பெருமை என்ற எதுவும் உதவப் போவதில்லை என்ற உணர்வு எப்போது வரும் என்றால், தியானத்திலே அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கி நிறுத்தி லயிக்கப் பழகும் போது தான்.
குரு என்ற அருளானது அந்த செயல்கள் செய்தவரைக்கும் இப்படித் தான் பதில் தந்தது என்று சொல்ல எந்த வரலாறும், செய்திகளும், சேகரிப்புகளும் நம்மிடையே இல்லை.
சீடர்கள் நடத்தும் நல்லது கெட்டதற்கு ஏற்ப வினை விளவு தர வேண்டிய வேலை இறை நிலைக்கு உண்டு என்பதால், நமது தன் முனைப்போடு நடப்பவைகளை பொருத்திப் பார்த்திருக்க வேண்டியதில்லை…
சீடனானவன் குருவைப் பணிந்ததால் தான் குருவாக ஆனான்… சீடர்கள் குருவை மட்டும் அலட்சியப் படுத்தியதால், குருவின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவிலே மாயை என்ற கோரப் பிடியிலே சிக்கி, சீடன் என்ற தகுதி இழந்து வாழ்ந்தோம் என்ற வரலாறு இன்றி முகவரி தொலைந்து மடிந்தோர்களிலே ஒருவராக ஆகிறான்..
குரு என்ற துடுப்பை விட்டு விட்டு, கப்பல் என்ற தியான பீடத்திலே, வாழ்க்கை என்ற கடலிலே சென்றால் என்ன செய்து விடப்போகிறான். மிஞ்சி மிஞ்சி ஆடம்பர வாழ்வும்,புலன் கவர்ச்சி கொண்ட வாழ்க்கை முறை தான்.
இப்போது நமக்கு புலன் கவர்ச்சி என்ற நிலை என்று தத்தளித்து, சீற்றம் தோன்றும் போதும், உடல் அழிவை நோக்கிச் செல்லும் போதும், அடடே நாம் இவ்வளவு நாளும் இப்படி ஏமாந்து விட்டோமே என்று சீடன் அலறுவான்… குருவிடம் செல்வான்… குரு சொல்வார்..
செயலுக்கு விளைவாய் தெய்வ ஒழுங்கமைப்பிருக்க தவறிழைத்து பின் பரமனைத் தொழுதால் என்ன ஆகிவிடப்போகிறது?
குரு என்பவர் மிகவும் புத்திசாலி. எது இருந்தால் மிகவும் நிம்மதியாக, சுகமாக வாழலாம் என்ற துல்லிய கணிப்புடன் வாழும் போதே தம்மை இறையோடு இணைத்து வாழ்க்கையிலே தானும் உயர்ந்து, ஒரு வழி காட்டியாய் சமுதாயத்திற்கும் பயனாகிறார்.
ஒருவர் காஞ்சி முனிவரிடம் சென்று” இன்னும் இந்த உலகில் துன்பம், துயரம், போர் எல்லாம் இருக்கின்றதே” என்றாராம்.
அவர் ” அட.. அப்படியா? ஒரு வேளை நான் செய்த தவம் போதவில்லை போலிருக்கு!”
குருவானவர் சொன்னார்.
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப்பொருள் கவர்ச்சி ஏதும் உள் நுழையா
இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? என்று.
நாம் புறப் பொருளாகக் காணும் எதுவும், நல்ல ஒரு தவத்திலே இருப்பதில்லை.. அது ஒரு குருவின் சீடர்கள் செய்யும் செயல்கள் வரை… இவ் விசயங்களைத் தாண்டியே அதாவது புறப் பொருளை உணரும் புலன் அறிவுக்குத் தாண்டி, உயிர் என்று நிலை கடந்து, அறிவாகப் பிரகாசிக்கிறது குருவின் இறை அருள்.
அங்கே அசைந்தாலே தவற விட்டு விடுவோம் குருவை/ இறையை…
குரு என்ற அருளை நோக்கி பக்தியுடன் அணுகிக் கொண்டே, தவத்திலே விழிப்புடன் இருக்கக் கற்றுக் கொண்டு, மனம் உயிர் என்ற நிலை கடந்து சென்றால் தான் குருவின் இருப்பிடத்திற்குச் செல்ல முடியும்… புலன் அறிவிற்கு குரு எட்ட மாட்டார். தன்னை அன்றி ஒரு பொருளும் இல்லை என்ற நிலையிலே இருந்து குரு விலகுவதே இல்லை…
நாம் புறப் பொருள்களிலே காணும் எதனோடும், குருவை பிடித்துக் கொண்டால் அன்றி தேறுவது கடினம். குருவானவர் நாம் காணும் புறப் பொருளை அவரும் பார்த்துக் கொண்டே தான் கடந்து சென்று இருக்கிறார். ஈசனின் நிலையிலே ஒன்றி விட்டவர் அவர்..
ஆனால், இந்த வான் காந்தக்களம் இருக்கிறது அல்லவா… இறை நிலையானது அங்கே எந்த ஒரு சீடனின் செயலையும் துல்லியமாக உள்ளது உள்ள படி கணக்கிட்டுக் கொண்டு செயலுக்கு விளைவு என்ற நியதியை தந்து கொண்டே இருக்கும்… இதிலே யாருக்கும் விதி விலக்கு இல்லை.
சரி… புலன் உணர்வுக்கு விளங்கும் உலகத்திலே நடக்கும் எதையும் எதற்காக நாம் சீரமைக்க வேண்டும். குருவை விடாதீர்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்?என்று கேட்டால்… அது கருணை நிலை தான்.
இதை புரிந்து கொண்டாலன்றி நமக்கு வேறு வழி ஏதுமில்லை.
எதனையும் விட குருவே உயர்ந்தவர் என்று குரு மீது அன்பு கொள்வோம்.. மலரும் சிவம் நமக்குள். வாழ்க வளமுடன்…!

ஆண்டிக்கோலத்தில் முருகனை வணங்க தயக்கமா?

பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன்? அது சரியா?

முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்கோலத்தை #ஞானதண்டாயுதபாணியை வணங்கிட பெரும்பாலான பக்தர்கள் யாரும் விரும்புவதில்லை.

இக்கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம் என நம்பிக்கை
கொண்டுள்ளனர். இது தவறாகும்.

அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு #அஞ்ஞானத்தை விலக்கி #மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார்?

நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை.

#தவறானவழியில்செல்வத்தைதேடாதே, #பொருளைத்தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம். தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.

அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர் சென்று விடுவர். இது தவறான செயல்.

தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றை துறந்து போலியில் பற்றின்றி வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.

மேலும், எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும், பிணமாய் எரியும் போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது.

இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.

வேண்ட தக்கது அருள்வோய் நீ…..
வேண்ட முழுதும் தருவோய் நீ….